நம் வாழ்க்கையை நாமே பார்க்காமல் ஏதோ ஒரு விஞ்ஞான மாய உலகத்தில் நம்மை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையான விசயம். சூரியனை பார்த்து கிராமத்திற்கு வருகின்ற டவுன்பஸ்ஸின் நேரத்தை தெளிவாக கூறிவிடும் பெரியவர்கள் எல்லாம் இன்று ஒரு சிலரே கிராமங்களில் உள்ளனர். அவ்வளவு தூரம் நாம் இயற்கையையும் நிலங்களையும் தொலைத்துவிட்டு, தொலைந்துபோய் வாழ்ந்துகொண்டுள்ளோம். நந்தினி போடுறப்ப தான்யா பஸ்ஸு வரும் என கிராமங்களில் கூட பலர் கூறுவதை கேட்கமுடிகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலை பால்யத்திலிருந்தே பார்த்து பயணித்து வளர்ந்த மலை. அப்பகுதி மக்களின் வாழ்க்கையை எந்த வித ஒப்பனையின்றி இயல்பாகவே காட்சியமைத்து, உண்மையான வலி நிறைந்த ஏழை விவசாயிகளின் வாழ்வியல் இரணங்களை அப்படியே அச்சு அசலாக ஜீவனோடு படம்பிடித்து காட்டியிருக்கிறார் லெனின் பாரதி.
இளையராஜாவின் பின்னனி இசை படத்திற்கு அற்புதமாக பொருந்தியுள்ளது. படத்தில் வரும் இரு பாடல்கள் கிளாசிக்.
உலகசினிமாவை இணையத்தில் தேடி தேடி பார்க்கும் நமக்கு. இந்தாடா நம் நாட்டிலேயே , நம்ம மண்ணிலேயே ஒரு உலகசினிமா இருக்குடா என்பதை காண்பித்துள்ளார்கள்.
உலகில் வாழும் எல்லாமக்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனையை, வலியை, ஒரு திரைப்படம் உணர்த்துமானால் அதுதான் உலகசினிமாவாக மலர்கிறது. இத்திரைப்படத்தில் மலைப்பகுதியில் அல்லது மலையை வாழ்வாதரமாக கொண்ட உழைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை பேசியுள்ளது.
ரெங்கசாமி என்ற அந்த கதாபாத்திரத்தின் வாயிலாக அப்பகுதி மக்களின் உணர்வுகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர். நடிகர்களெல்லாம் , ஒரு சிலரைத்தவிர பெரும்பாண்மையினர் அப்பகுதி மக்களே நடித்துள்ளதால். திரைப்படத்தோடு நம் மனம் இயல்பாக ஒன்றிவிடுகிறது.
நிலமற்ற உழைக்கும் வர்கத்தினரின் வலி மிகுந்த வாழ்க்கையை இப்படம் பதிவு செய்துள்ளது. எப்படி உழைக்கும் தொழிலாளர்களை நசுக்கி கார்ப்பரேட் முதலாளிகள் வாழ்கின்றனர் என்பதை தெளிவாக காண்பித்துள்ளனர். அந்தரத்தில் தொங்கும் சொந்தபந்தமில்லாத ஏழை வாழ்க்கையினை பதிவு செய்து நமக்கு பாடம் எடுத்துள்ள லெனின் பாரதி அவர்களை வணங்குகிறேன்.
அந்த ஏலக்காய் மூட்டை மலையிலிருந்து விழும்போது மனம் ரெங்கசாமி என்ற ஏழைக்காய் பதறுகிறது. வாழ்க்கை இனியாவது அற்புதமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது குழந்தைக்கு தான் வாங்கப்போகும் சிறிய நிலத்தை காண்பிக்கும்பொழுது தவறுதலாக மூட்டை சரிந்து பள்ளத்தில் விழும் பொழுது மனம் கண்ணீர்விட்டு அழுகிறது.
அந்த மூட்டை ஏதோ ஒரு மரத்திலோ, பாறையிலோ மோதி நின்றுவிட வேண்டும் என மனம் எண்ணுகிறது. ஏனெனில் விழும் மூட்டை வெறும் ஏலக்காய் மூட்டையில்லை அவன் குடும்பத்தின் கனவு.
வசனங்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது . கம்யூனிசத்தை சப்தம்போட்டு சொல்லாமல் காட்சியிலியே அதிகம் புரியவைக்கிறார்.
ஒரு ஏழை தொழிலாளி வாழ்க்கையை தனது உழைப்பினால் மாற்ற முயற்சித்தாலும், சுற்றியுள்ள சுரண்டல்வாதிகள் அந்த அப்பராணி இளைஞனை முன்னேற வழி செய்யாமல், சுரண்டி அவனை ஒரு கார்ப்பரேட் முதலாளிகளின் கீழே பணியில் அமரச்செய்கிறது என்ற நிலையை காட்சிபடுத்தியிருக்கிறது இத்திரைப்படம்
இறுதிக்காட்சியில் சுழலும் பெரும் காற்றாடிகள் நமது மனதை மாயையிலிருந்து விடுவிக்க சுழல்வதை போன்றுள்ளது.
படத்தை தயாரித்த விஜய்சேதுபதிக்கு நன்றி.
(தோழர்கள் தங்கள் எண்ணங்களை பகிருங்கள் படம் பாருங்கள்)