வாழ்க்கை எத்தனையோ முரண்பாடுகளால் நிறைந்திருக்கிறது. அன்பு, ஆசை, கோபம், காமம் என்ற உணர்வுகளால் அலைக்களிக்கப்பட்டு வாழ்கிறோம். இறுதியில் வாழ்க்கைப் பயணம் சென்றடைவது மரணம் என்ற பெரும் வாயிலுக்குத்தான்.
மதர் அண்ட் சன் திரைப்படத்தில் மரணத்தின் அருகில் இருக்கும் அன்னைக்கும் , இளம் வயது மகனுக்குமான உன்னதமான கடைசி நிகழ்வை படம் பிடித்து காண்பித்துள்ளார்கள். மகனும், நோய்வாய்ப்பட்ட அன்னையும் வனம்சார்ந்த குளிர்பிரதேச வீட்டில் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு அறையில் உள்ளார்கள். அன்னை மிகவும் நோய்வாய்பட்டுள்ளாள், மகன் அன்னையிடம் தான் நேற்றைய இரவில் கண்ட விசித்திரமான கனவைப்பற்றி அன்னையிடம் சொல்கிறான். தான் ஒரு தனித்த நீண்ட பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன் அப்போது என்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவது போலிருந்தது, நான் திரும்பி ஏன் என்னை பின் தொடர்கிறாய் என கேட்டேன். அப்போது அவன் எனக்கு என்ன பதில் கூறியிருப்பான் என நோய்வாய்ப்பட்ட அன்னையிடம் கேட்கிறான்.
அன்னை மனப்பிறழ்வில் நினைவுகளில் இருந்து ஏதேதோ சொல்கிறாள். மகன் அன்னை கூறும் அனைத்திற்கும் ஆட்சேபம் செய்யாமல் சரி என்கிறான்.
நம் இருவருக்கும் ஒரே கனவுதான் வந்துள்ளது என்கிறான். பின் சீப்பை எடுத்து அன்னையின் தலையை மெல்ல சீவி விடுகிறான். பின் அன்னை தன்னை வெளியே நடைபயிற்சிக்கு அழைத்துப்போ என்கிறாள்.
வெளியே கடும் குளிர் அடிக்கிறது. முதலில் தண்ணீர்வைக்கிறேன். என கூறிவிட்டு வீட்டின் கதைவை திறந்து வெளியே வருகிறான். பனி சூழ்ந்திருக்கிறது , கீழே இறங்கி தண்னீர் கொண்டு வருகிறான். வானத்தைப் பார்க்கிறான். இடியும், மின்னலும் இடிக்கின்றது. பின் வீட்டிற்குள் வந்து அனல்மூட்டுகிறான்.
இயற்கை அழகு மிகுந்த வனத்தின் பாதையில் அன்னையை தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறான். மரப்பலகையில் அன்னையை அமரவைத்து தலையை தன் தோள்பட்டைமேல் சாய்த்துக்கொள்ளச்செய்கிறான். அன்னை மெல்லிய புன்னகை செய்கிறாள். எனக்காக காத்திரு அம்மா எனக்கூறிவிட்டு வீட்டிற்குச்சென்று பழைய போஸ்ட்கார்ட் புகைப்படங்களை எடுத்து வந்து அன்னையிடம் வாசித்து காண்பிக்கிறான்.
பழைய நினைவுகளை சொல்லி அவளிடம் பேச முயற்சிக்கிறான். சில நினைவுகள் அவளுக்குள் எழுந்துவர தனது மகனின் தலைமுடியை கோதி விடுகிறாள். மகன் வாசித்துக்கொண்டிருக்கும்போதே வலிமிகுதியால் சப்தமெலுப்புகிறாள். மகன் அன்னையை அரவணைத்துக்கொள்கிறான்.
சிறிது நேரத்தில் அன்னையை தூக்கிக்கொண்டு வனப்பாதையில் நடக்கிறான். இடி இடிக்கிறது, காற்றின் வேகம் அதிகரிக்கிறது. நாணல்கள் காற்றில் அசைந்த வண்ணம் உள்ளன. தூரத்தில் இரயில் புகையை உமிழ்ந்தவாறு சென்று கொண்டுள்ளது.
நாணல் புதர் அருகில் அமர்ந்துகொள்ளச்செய்கிறான். அங்கேயும் பள்ளிக்கால நினைவுகளை அன்னையிடம் பகிர்ந்துகொள்கிறான். பின் அங்கிருந்து அன்னையை தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறான்.
அன்னைக்கு முத்தம் தருகிறான். மலைகளும், மரங்களும் நிறைந்த வனப்பாதையில் நடந்து செல்கிறான். வீட்டிற்கு வந்து அன்னையை நாற்காலியில் அமரச்செய்து, கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறாயா எனக்கேட்கிறான். அன்னையின் அருகிலேயே அமர்ந்து வெளியில் விரைவாக வீசிக்கொண்டிருக்கும் காற்றின் சப்தத்தைக் கேட்கிறான்.
அன்னையை அருகில் நின்றுகொண்டு கவனித்துப்பார்க்கிறான். பின் விலகிச்சென்று ஜன்னல் கதவுகளை திறந்துவிடுகிறான். ஜன்னலில் இறந்துபோன பட்டாம்பூச்சிகள் மரப்பலகையில் ஒட்டிக்கொண்டு நின்றுள்ளது. காற்று அந்த இறந்த பட்டாம்பூச்சியை தாலாட்டுவது போல ஆடிக்கொண்டுள்ளது.
அன்னையை படுக்கையில் துயிலச்செய்கிறான். அவள் விரைவிலேயே எழுந்து கொண்டு புலம்புகிறாள். அப்போது அன்னையை கட்டி அரவனைத்து ஆருதல் கூறுகிறான்.
அன்னை அவள் நினைவில் வரும் பழைய காட்சிகளை சொல்லிக்கொண்டு புலம்பிக்கொண்டுள்ளாள்.
மகன், எனது இதயம் நொறுங்கி விட்டது ..
நீ சாப்பிடவும் மாடுகிறாய்.. தூங்கவும் மாட்டுகிறாய்..
ஜன்னலின் வெளியே பார் அம்மா எவ்வளவு அழகான மலர்கள் பூத்திருக்கிறது என்கிறான்.
அன்னை அவன் காதருகே வந்து என்னை மண்ணித்துவிடு..
என்னால் நீ எவ்வளவு அழுதுவிட்டாய் என்கிறாள்.
அப்படியெல்லாம் இல்லை என அன்னையை அரவணைத்துக்கொள்கிறான்
அன்னையின் கையில் இறந்த பட்டாம்பூச்சியொன்று வந்து ஒட்டிக்கொள்கிறது. அவள் மெல்லிய புன்னகையோடு பார்த்துக்கொண்டே கண் மூடுகிறாள்.
மகன் வீட்டை விட்டு வெளியே மரத்தின் அருகில் நின்றுகொண்டு கண்ணீர்விடுகிறான். பின் சிறிது நேரத்தில் வீடு சென்று பார்க்கும் பொழுது அன்னை இறந்துள்ளாள்.
அன்னையை கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கிறான். உன்னிடம் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும்
எனக்காக காத்திரு என்கிறான். படம் நிறைவடைகிறது.
மரணம் தழுவும் நிகழ்வை ஒரு தவம் போல காண்பித்துள்ளார்கள். இருளும் , ஒளியும் கலந்த அறையை காண்பிக்கும்போதும், நாணல்களுக்குள் ஊர்ந்துசெல்லும் இரயிலை காண்பிக்கும் போதும் இயற்கை அப்படியே அழகாக காமிராவில் பதிந்துள்ளது.
மகனுக்கும் அன்னைக்கும் உள்ள நெருக்கமான உறவை அன்பை அழகாக காண்பித்துள்ளார்கள்.
இப்படத்தை பார்க்கும்பொழுது நம் உள் உணர்வுகள் கண்டிப்பாய் அன்னையை எண்ணி ஏங்குவதை ஆத்மார்த்தமாக உணர முடியும்
இப்படத்தை இயக்கியவர் அலெக்ஸாண்டர் சோகுரோவ், வெளிவந்த ஆண்டு 1997.
https://en.wikipedia.org/wiki/Mother_and_Son_(1997_film)#Plot
நன்றி: உலக சினிமா – செழியன்