kanaiyazi

 

ரமா போயி படுங்க”…

“வார்டு வரண்டாவுல இப்படியா படுக்க கண்டோம்; ஆஸ்பத்திரில ஒரு சீக்காளிய  அட்மிட் பண்ணிட்டு; குடும்பத்தோட அஞ்சாறு ஆளுக வந்து கெடக்குறது; நடந்து போறதுக்கு கூட பாதை இல்ல”…

என  ஸ்ட்ரெக்சரை தள்ளிக்கொண்டு ஒரு குண்டான நடுத்தரவயது பெண் எரிச்சல்பட்டு சப்தமிடுவதைக்கேட்டு ஆஸ்பத்திரி வரண்டாவில் படுத்துக்கொண்டிருந்த முனியாண்டி தூக்கம் களைந்துபோய்   கண்விழித்தபோது ,நேரம் அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது.

”நேத்து டூயிட்டில இருந்த பொம்பளயெல்லாம் இப்படி சத்தம் போடலப்பா” ..

“நிம்மதியா தூங்கினோம்”

இந்த பொம்பள என்னவோ…  தன்னோட ஆஸ்பத்திரி போல  கத்திக்கிட்டிருக்கா…

”இந்தம்மா ”வார்ட் கேட் கீப்பரா” டூயிட்டிக்கு வந்தாலே இப்படித்தான்”  என தூக்கம் களைந்து எழுந்த சிலர் பேசிக்கொண்டனர். இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்ததால் இரவில் குளிர் அதிகமாகத்தான் இருந்தது. வானில் நிலா  பளீச்சென்று ஒளிவீசிக்கொண்டிருந்தது. தேனி, நாகப்பட்டினத்திலுள்ள துணிக்கடைகளின் விளம்பரங்கள் அச்சிட்ட துணி நிறம்பிய பைகளுடன் ஆஸ்பத்திரி வரண்டாவில்  அசந்துபோய் பலர் தூங்கிக்கொண்டிருந்தனர்.  

அதிலொருவன் போர்வையை விலக்கி, முனியாண்டியை பார்த்து கண்சிமிட்டினான். அவனது  கேசம் முழுவதும் நரைத்திருந்தது; பார்க்க நாற்பது வயது ஆள்போல் உடம்பு திடகாத்திரமாகத்தான்இருந்தான்.

”அந்தம்மா இப்படித்தான் திட்டிக்கிட்டேயிருக்கும் அத எல்லாம் காதுல வாங்காத”..

”நான் ஒரு வாரமா இங்கதான் படுத்துக்கிட்டு இருக்கேன்.. என் பொண்ணு இந்த வார்டுலதான்அட்மிட் ஆகியிருக்கு”..

“பேசாம தூங்கு” ..என மெல்லிய குரலில் பேசினான்.

இந்த ”கஜாப்புயலுல” தென்னந்தோப்பு எல்லாம் சாஞ்சுபோச்சான், டீவியில அதத்தான் காட்டிக்கிட்டிருக்காக; என் தோட்டத்துல அம்பது தென்னமரங்க இப்பதான் ஒரு சேர காய் வச்சிருந்துச்சு; எல்லாம் சாஞ்சுபோச்சான், இப்பதான் என் பெரிய பொண்ணு போன் பண்ணுச்சு..

 ”இனி பொழப்புக்கு என்ன செய்ய”.. என சம்சாரியொருவர் புலம்பிக்கொண்டிருந்தார். அவருக்கு இந்த குளிருலும் வியர்த்துக்கொண்டிருந்தது. முனியாண்டிக்கு தூக்கம் வரவில்லை. ஆஸ்பத்திரிக்கே உண்டான வாசனை வீசிக்கொண்டிருந்தது.. வார்டு கதவை எக்கிப்பார்த்தான். வார்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது. டூயிட்டி நர்ஸ் நிம்மதியாக தூங்கிகொண்டிருந்தாள், மற்றொரு.. நர்ஸ் வாட்சப்பில் ஏதோ பார்வேட் செய்து கொண்டிருந்தாள். நோயாளிகளான குழந்தைகளின் இருமல்களும், சினுங்கல்களும், முனகல்களும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

போர்த்தியிருந்த கைலியை  இறக்கி, இடுப்பில் கட்டிக்கொண்டு வார்டுக்குள் சென்று பார்த்தபொழுது காளீஸ்வரி விழித்துக்கொண்டுதானிருந்தாள்.

என்னங்க தூக்கம் வரலையா,,,

தம்பிக்கு  ஒரே இருமல்ங்க

தூங்கவே இல்ல..

ஒடம்பு அனலா கொதிக்குது

நர்சம்மா சரியா கவனிக்கவேயில்ல..

நான் ஒரு தடவ பாருங்கன்னு சொன்னதுக்கு..

எரிச்சலா வந்து பாத்துட்டு : ஈரத்துணிய வச்சு ஒடம்ப தொடச்சுவிடுங்கன்னு சொல்லிட்டுபோச்சு; இத்தனை வருசத்துல இவனுக்கு இப்படி காய்ச்சல் வந்ததேயில்லையே; பேசாம ஊருலயே இருந்திருக்கலாம் போல… என அழுதுவிடுவது போல பேசினாள் ..

இப்படி பேசும் காளீஸ்வரியை பார்க்கும் பொழுது  எரிச்சலாய் வந்தது முனியாண்டிக்கு.. கிராமத்தில் இருந்தபொழுது இவள் செய்த நச்சரிப்புகள் அவன் கண்கள் முன் காட்சியாய் விரிந்து நின்றது

”உங்க குடும்பத்துல இருக்குற எல்லாத்துக்கும் வடிச்சு கொட்ட என்னால முடியாது; என்னைய டவுனுக்கு கூப்புட்டுபோயி தனி வீடு பாத்து வச்சுக்கோங்க

”தம்பியையும் , இங்கிலீஸ் மீடியத்துல சேத்து படிக்க வைச்சுக்கலாம்”

“ எனக்கு டவுனுல இருக்கணும்னு ஆசையா இருக்கு”…

”எப்ப பாரு இதே ரெண்டு தெரு மூஞ்சிகளை பாத்து பாத்து , என் வாழ்க்கைதான் பாழாப்போச்சு…

 எம்புள்ள  வாழ்க்கையும் கெட்டுப்போகனுமா?

கிராமத்துல  இருந்தா உள்ளூர்காரங்களோட சேர்ந்து என் புள்ளையும் உருப்படாம போயிடுவான்.

 ”இந்த வருசம் பள்ளிக்கூடம் தெறக்குறப்ப, நம்ம புள்ள சுஜீத்த டவுனுலதான் படிக்கனும்னு சொல்லிப்பூட்டேன் ”..

என ஒவ்வொரு நாளும் சண்டை நடக்கும்போதெல்லாம். ஏண்டா கல்யாணம் பண்ணினோம் என்றிருக்கும் முனியாண்டிக்கு. காளீஸ்வரி பத்தாம் வகுப்பு வரை படித்தவள். ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. திரும்ப திரும்ப ஆங்கிலத்தை இரண்டுவருடம் அட்டம்ட் எழுதிப்பார்த்தாள் ஒவ்வொருமுறை எழுதும்போதும் முதலில் வாங்கிய மார்க்கைவிட குறைந்து, குறைந்து 15 மார்க்கில் வந்து நின்றது.

என் நிலமைக்கு ”இந்தப் பாழாப்போன இங்கிலீஸுதான் காரணம். என அடிக்கடி புலம்பிக்கொண்டே இருப்பாள். இனி தன் பிள்ளையாவது நல்ல பள்ளிக்கூடத்துள்ள படிச்சு பெரிய ஆளா வரணுங்கிற ஆசையே அவளுக்கு டவுனுக்கு போகவேண்டும் என்பதற்கு மூல காரணமாக இருந்தது.

காளீஸ்வரி புலம்பும்போதெல்லாம் அவளுக்கும் முனியாண்டிக்கும் சண்டை வந்துவிடும்; அத்தருணத்தில் சப்தம் கேட்டுவரும், தெரு ஓரத்தில் இருக்கும் குந்தானிக்கிழவிதான் சமரசம் செய்துவைக்கும்.

உடம்பு பருத்த குந்தானிக்கிழவியோட பெயர் லட்சுமி. பொக்கை வாயுடனும்,   கவட்டை போல் வளைந்த கால்களுடனும்  இருக்கும், கிழவிக்கு கண்கள் மட்டும் நன்றாக தெரிந்துகொண்டிருந்தது. ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவள்தான்; குழந்தைகள் இல்லை; புருசனும் போய் சேர்ந்த பின்ன சொந்த பந்தங்கள் ,சொத்தை பிடிங்கிக்கொண்டு கவனிக்கவில்லை. தெருவோரத்தில் இருக்கும் பழைய பொதுக்குழாயின் மோட்டார் ரூம்தான் வசிப்பிடம்;  விசேசமான நாட்களில் தெருவில் வசிப்பவர்கள் கரிசனத்தோடு தரும் பலகாரங்களை விரும்பி சாப்பிடும்; எவ்வளவு பசி எடுத்தாலும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை இதனாலேயே தெருவில் இருப்பவர்கள் குந்தானிக்கிழவியை தன் வீட்டு பெரிய மனுசியாக எண்ணிக்கொண்டு உதவிவந்தனர்.

குந்தானிக்கிழவிக்கு முனியாண்டியின் மேல் தனிப்பாசம் இருந்தது; முனியாண்டியின் தாத்தா ஒச்சுவும், கிழவியும் ஒரே வயதினர்; தாத்தா இறந்த அன்று குந்தானிக்கிழவியின் ஒப்பாரிதான் ஓங்கி ஒலித்ததாம். ரெண்டு பேருக்கும் அப்படியொரு சிநேகிதம்.

“ஏ புள்ள.. எதுக்கு சண்ட போடுற”…

”சத்தமில்லாம சந்தோசமா குடும்பம் நடத்துங்கப்பா” என கிழவி சொல்லும் அனுசரணையான வார்த்தைகளில் ‘ காளீஸ்வரியின் கோபங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

****

முனியாண்டியின் வீடு இருந்த தெருவில்தான் பள்ளிக்கூடமும் இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளி. சுற்றிலும் மண்சுவர்தான். ஓடு வேயப்பட்டிருக்கும், நடுவில் வெட்டவெளி, சுஜீத் இந்த துவக்கப்பள்ளியில்தான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான். இந்த பள்ளிக்கூடம் இருந்ததால் கிராமத்தில் எல்லோரும் இந்த தெருவை பள்ளிக்கூடத்தெரு என அழைத்தனர். பள்ளிக்கூட தெருவில் உள்ள  வீடுகளில் யாருக்காவது உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டால் உடனே பதட்டத்தோடு தனது வளைந்த கருவேல கம்பை ஊன்றிக்கொண்டு வந்து நாட்டு மருந்து விபரத்தை சொல்லி செல்லும்  குந்தானிக் கிழவி,  குழந்தைகளுக்கு வரும் வாந்தி பேதி, சளி காய்ச்சலுக்கு கிழவி சொல்லும் வைத்தியம் உடனே கேட்கும் என கிழவியோடு சேர்ந்த கிராமத்தின் நினைவுகளை சுந்து நின்றிருந்தான் முனியாண்டி , மகன் சுஜீத்தின் உடம்பை தொட்டுப்பார்த்ததான் . உடம்பு அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது.

மனைவி காளீஸ்வரி அசந்துபோய் பெட்டின் அருகில் இருக்கும் தரையில் துண்டைவிரித்து படுத்திருந்தால், மனைவி மேல் கோபம் இருந்தாலும், இப்போது காளீஸ்வரியை பார்க்க பாவமாய் இருந்தது முனியாண்டிக்கு.

நேரம் காலை ஐந்து மணி ஆகியிருந்தது; தூங்கிக்கொண்டிருந்த நர்ஸ் , எழுந்துவிட்டிருந்தாள், காய்ச்சல் காண்பிக்கும் தெர்மா மீட்டரை எடுத்துவந்து சுஜீத்தின் கக்கத்தில் வைத்தாள்; ஒரு நிமிடம் கழித்து “ப்ப்பீ” என்ற சப்தத்தோடு  தெர்மா மீட்டர் 103.5 என காண்பித்தது. ஒரு மஞ்சள் நிற பைலை திறந்து எழுதிக்கொண்டாள்.

”காய்ச்சல் இன்னும் இருக்கு”….

”துணி தர்ரேன் நல்லா ஒடம்ப தொடச்சுவிடுங்க” என்றாள்

”பாராஸிட்டமால் டானிக்” கொடுக்கலாமா என கேட்டதற்கு

”டாக்டரை கேட்காம தரக்கூடாது”.. எனக் கூறிக்கொண்டே சென்றுவிட்டாள்.

நேத்து மாலை  வார்டில் சேர்த்தது இதுவரை எந்த மருந்தும் தரவில்லை இதுக்கு எதுக்கு இந்த ஆஸ்பத்திரில  வந்து கெடக்கனும் ,…..

“பேருக்குத்தான் மருத்துவம் இலவசம்  என இரயில்வே ஸ்டேசன் , பஸ் ஸ்டாண்டுல இருக்குற டீவியில எல்லாம் விளம்பரம் போட்டிருக்காங்க.. ”காசு கொடுத்து பாக்குறவங்களுக்கு ஒரு கவனிப்பு, இல்லாதவங்களுக்கு ஒரு கவனிப்பு” என ஒரு வயதான அம்மா வரண்டாவில் பொலம்பிக்கொண்டிருந்தாள்.

முனியாண்டியின் குடும்பம்  மதுரை டவுனுக்கு வந்து இன்றோடு ஆறு மாசம் ஆகிறது. எட்டாயிரம் வாடகை கொடுத்து  வாழும் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை; டவுனுக்கு வந்த புதிதில் காளீஸ்வரி சந்தோசமா இருந்தாள் தினமும்  சுஜீத்தை ரிசர்வ்லைன் போலீஸ் குவாட்டர்ஸ் பார்க்கில் விளையாட விடுவதும், ஞாயிற்றுக்கிழமையில மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், இரவுகளில் தமுக்கம் மைதானத்தில் போடும் பொருட்காட்சிக்கு செல்வதும், அங்கே சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய ராட்டினங்களைப் பார்த்து மகிழ்வதும்; வைகையில் தண்ணீர்வரும்பொழுது  சுஜீத்தை கூப்பிட்டு இதுதாண்டா நம்ம ”வைகை ஆறு” என காண்பிப்பதுமாக சந்தோசமாகத்தான் சென்றது.

முனியாண்டிக்கோ வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும்  ஒரு சூப்பர்மார்க்கெட்டில் செக்கியூரிட்டி வேலை.. சுதந்திரமா தோட்டத்தில் மண்வெட்டி எடுத்து வெட்டிக்கொண்டும்; நீர் பாய்ச்சிக்கொண்டும் திறிந்தவனுக்கு… பேண்ட் , சட்டை தொப்பி போட்டு கேட்டில் உட்கார்ந்திருப்பது சிறிது நாட்கள் பிடிக்காமல்தான் இருந்தது..

காளீஸ்வரியின் சந்தோசத்தையும்,;சுஜீத்தின் எதிர்காலத்தையும் நினைக்கும்பொழுது தனது கஷ்டங்களை பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை.

மாசம் 15000 சம்பளம் வாடகை போக வீட்டுச்செலவோடு சரியாக இருக்கிறது.

அவசர ஆத்திரத்துக்கு பக்கத்து வீட்டுல கேட்டு வாங்க கூட முடியல..

அப்பார்ட்மெண்ட்டுக்கு குடி  வந்த புதிதில் ரெண்டு நாள் தானா போயி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேச்சுகொடுத்தாள் காளீஸ்வரி ; யாரும் முகம் கொடுத்து பாசமாக பழகவில்லை. 

கிராமத்தில்  இருக்குறப்ப இவ்வளவு செலவு இல்ல.. தோட்டத்துல கிடைக்குற வெள்ளாமையில வருகிற  பணத்தை பேங்ல போட்டுட்டு தேவையானப்ப செலவுக்கு எடுத்தாலே போதுமாக இருந்தது.

டவுனுக்கு கிளம்பும் முடிவை ஐயாவிடம் சொன்னபோது.. ஐயா எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

“ நீ வேணுமுன்னா போப்பா”..

எனக்கு இந்த செவக்காடும்.. ஓனாக்கரட்டு மலையே போதும்”

தோட்டம்தான் எனக்கு நிம்மதி கொடுக்குற இடம் .

”டவுனு வாழ்க்கை எனக்கு ஒத்துவராது”.. எனக்கூறிவிட்டார்.

”ஒரே மகன் ஆசையா வளத்தீங்; அம்மாவும் செத்துப்போச்சு; வயசான காலத்துல அப்பாவ பாத்துப்பான்; தோட்டன் தொறவ கட்டி காப்பாத்துவான்னு பாத்தா இப்படி பொம்பள முந்தானைக்கு பின்னாடி திரியுறவனா மாறிட்டானே”

இவன நம்பி காச கொடுக்காதப்பா…

ஓங் கணக்குல காச போட்டு வைய்யி

அப்பதான் இனி வரப்போற காலத்துல இந்த ”குந்தானிக்கிழவி”க்கு கிடைக்கிற கஞ்சியாச்சும் கிடைக்கும்” என சாவடியில் சாக கிடக்கும் ஊர்பெருசுகள் அடிக்கடி ஐயாவுக்கு ஓதிக்கொண்டேயிருந்ததால் ;

அடுத்த நாளே ஐயா, கிருஸ்ணன்  மாமாவோடு சென்று இந்தியன் பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பித்து தனியாக கரும்பு விற்ற பணத்தை போட்டு வைத்துக்கொண்டார்.

 

”என்னங்க …. என்னங்க டாக்டரு வறப்போறாங்களாம்….

 ரெண்டு பேரு வார்ட்ல இருக்க கூடாதாம் நர்சம்மா திட்டுறாங்க…

 நீங்க வெளிய நில்லுங்க…

சுஜீத் பள்ளிக்கூட வாட்சப் குருப்புல அவனுக்கு லீவ்னு அடிச்சு அனுப்புங்க என காளீஸ்வரி புஜத்தை பற்றி உலுக்கியபோதுதான் ஹாஸ்பிட்டலில் இருப்பதை உணர்ந்தான் முனியாண்டி..

வார்டே பரபரப்பாக இருந்தது ; வேகமாக பெட்டை ஒட்டியிருந்த மரபெஞ்சை விட்டு எழுந்து வார்டைவிட்டு வெளியேறி டாக்டர் என்ன சொல்கிறார் என கேட்பதற்கு மதில் சுவரை எக்கிப்பார்த்தான் ..

டாக்டருக்கு நன்றாக வயதாகிருந்தது, கண்ணாடி போட்டிருந்தார். ஒடுசலான தேகம்தான். டாக்டரைச் சுற்றி பல இளம் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் கையில் நோட்சோடு நின்றுகொண்டிருந்தனர்,

டாக்டர் ’நௌ ய டேய்ஸ், டெங்கு அட்டாக் இஸ் வெரி ஹை ரேசியோ’ என கூறிக்கொண்டே ஒவ்வொரு குழந்தையின் பைலையும் பார்த்தார்.

 

 

வார்டுஇப்படி எல்லாம் எக்கி பாக்க கூடாது என  ஒரு  வார்டிலிருந்து  ஒரு நர்சம்மா  அதட்டியது …

விருட்டென ரோசம் வந்தாலும்… , பாம்பாட்டியிடம் சிக்கிய பாம்பை போல் இவர்களிடம் சிக்கிக்கொண்ட பின் என்ன செய்ய முடியும் ”உஸ் உஸ்” என சப்தம் எழுப்பினாலும் பயப்பிடவா போறாங்க என எண்ணிக்கொண்டே விரு விருவென்று படியில் கால்கள் இறங்கினாலும்; முனியாண்டியின் மனம் முழுவதும் வார்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தது.  சுஜீத்த பாத்துட்டு டாக்டர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை. ”காளீஸ்வரி கண்டிப்பாய் போன் செய்வாள்” என எண்ணிக்கொண்டு சட்டைப்பையில் வைத்திருந்த கைப்பேசியை அடிக்கடி எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான் .

மனைவி சொன்னது போல ஸ்கூல் வாட்சப் குருப்பிற்கு “சுஜீத்திற்கு காய்ச்சல் இன்னைக்கு லீவ் மேலம்” என டைப் செய்து அனுப்பினான்.

கிராமத்தில்  இருந்த பொழுது சுஜீத் ஒரு நாள் பள்ளிக்கூடம் போகலைன்னா, வாத்தியார்கள் வீட்டுக்கே வந்து விசாரிப்பார்கள் ஆனா இந்த டவுனுல அந்த மாதிரி புள்ளைங்க மேல அக்கறையாவா இருக்காங்க.. எல்லாமே மெசினப்போலத்தான் நடந்துகிட்டுருக்கு என முனியாண்டி நொந்துகொண்டான்.

ஒவ்வொருமுறையும் மெட்ரிகுலேசன்  பள்ளிக்கூடத்துக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்குன்னு கூப்புட்டு குழந்தைங்க செய்யுற சின்ன சின்ன விசயத்தைக்கூட குத்தமா எடுத்துச்சொல்லுற டீச்சர்களை பாக்குறப்ப ;  கிராம துவக்கப்பள்ளியில் ஹெட்மாஸ்ட்டர் பழனிச்சாமி சார் கூறியது முனியாண்டியின் நினைவில் வந்தது.

” இங்க பாருப்பா முனியாண்டி..

சுஜீத்து நல்ல துரு துருன்னு இருக்குற பய..

பாடத்த எல்லாம் நல்லா கவனிக்கிறான்

நல்லா படிக்கிறான்…

இப்ப கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துலயும் நல்ல வாத்தியார்கள் இருக்காங்க..

நம்ம பள்ளிக்கூடத்துல பாரு..

கனகரத்தினம் டீச்சர் நல்லாசிரியர் விருது வாங்கிருக்காங்க..

நீ அவசரப்பட்டு  பிரைவேட் மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல சேக்காத..

காச புடிங்கி, மனச ஒடச்சுருவாங்க பாத்துக்க..

இதுக்கு மேல ஓம் விருப்பம்”……

கைப்பேசி இளையராஜாவின் பாடலோடு ஒலித்தது..

பரபரப்போடு கைப்பேசியை பார்த்தான் முனியாண்டி.  மேனேஜர் என எழுதியிருந்தது..

 “ ஹலோ”

முனியாண்டி , முனியாண்டிதான பேசுறது ”

ஆமாம் சார்

 இன்னைக்கு  டூயிட்டிக்கி வந்துடு,  தெனமும் ஒனக்கு லீவு கொடுத்துட்டு இருக்க முடியாது பத்து மணிக்குள்ள கேட்ல சேஞ் பண்ணிரு” என சப்தமான எரிச்சலான குரலில் பேசினார் முனியாண்டிக்கு போன வைய்யிடா வென்னஎன சொல்ல வேண்டும் போலிருந்தது.  ஆனால் மௌனித்திருந்தான்.சுஜீத்துக்கு சரியானப்புறம் முதல் வேலையா இந்த ”ஐகார்ட” கடை மேனேஜரின் மூஞ்சிமேலயே தூக்கிப்போட்டுட்டு வேற வேலை தேடிக்கிறனும் ..

அதே வேளை ”காளீஸ்வரி இன்னும் போன் செய்யாமல் இருக்கிறாளே” என்ற எரிச்சல்தான் அதிகமாக இருந்தது.

வேகமாக முனியாண்டியின் கால்கள் வார்டை நோக்கி தன்னிச்சையாக நடந்தது.

*******

 

காளீஸ்வரி எப்போதும் போல் அழுதுகொண்டே இருந்தால் முனியாண்டியை பார்த்ததும்

என்னங்க டாக்டரு பார்த்துட்டு ”லங்ஸ்ல” நிறைய சளி இருக்குது ஸ்பெசல் வார்டுக்கு மாத்திக்கோங்க பெரியாஸ்பத்திரியில இருக்குற ஸ்பெசலிஸ்ட்ட கூப்புடுறேன். பணம் கொஞ்சம் செலவாகும் ஏற்பாடு பண்ணிக்கோங்கன்னு போயிட்டார் என்றாள் .. முனியாண்டிக்கு மயக்கம் வருவதுபோலிருந்தது.

கிராமத்தில் வீட்டை சுற்றியிருந்த வேம்புவின் காற்றே நோய் வராமல் தடுத்தது ; இந்த டவுனில் புளுதியும், புகையும் நிரம்பியிருக்கும் ககாற்றைதானேசுவாசிக்க வேண்டியுள்ளது. கிராமத்தில் இருந்தபோது வாழ்க்கையே எளிமையாக இருந்தது. நோய் வரும்பொழுது தெருவாசிகள்  அன்போடு விசாரிக்கும் விசாரிப்புகளிலேயே பாதி நோய் போய்விடுகிறது.. ஆனால் இங்கே நகரத்தில் யாரும் யாரையும் கண்டுகொள்வதே இல்லை; அதுவும் அப்பார்ட்மெண்டில் சொல்லவே தேவையில்லை எனமுனியாண்டியின் மனதில் எண்ண ஓட்டங்கள் அலையாய் அடித்துக்கொண்டிருந்தது.

தானே வந்து வலையில் சிக்கிய மீன் போல் இந்த டவுனுக்கு வந்து மாட்டிக்கொண்டோமே என குழப்பத்தோடு நின்றிருந்தான் முனியாண்டி. சுஜீத்தின் உடம்பை தொட்டுப்பார்த்தான். உடம்பு அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது. கண்மாயிலும், கிணத்திலும் குதித்துக்கொண்டு சந்தோசமாக இருந்த   பிள்ளை,  எலும்பும் தோளுமாய் போய்விட்டானே என ஏங்கினான் .

கிராமத்துக்கு இப்ப போனாலும் ஒன்னும் செய்ய முடியாதே.

பணத்த யாரிடம் கேட்பது?

அப்பா , ஊர் பெருசுக பேச்சைக் கேட்டுட்டு,  இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல..

வைராக்கியமா ஊரவிட்டு வந்தோம்.. தோத்துபோய் ஊருக்கு போறதா?….

காளீஸ்வரி முகத்தை பார்க்கும் பொழுது  ” வாடிய  கரும்பு போல்” நிற்பதுபோன்றிருந்தது.

காளீஸ்வரி.. கையில காசு வச்சுருக்கையா?

காளீஸ்வரி இடுப்பில் சொறுகி வைத்திருந்த பர்ஸை எடுத்தாள்.

“இருநூறு ரூவா இருக்கு”…

சரி நூறு ரூவா த்தா.. நேரம் இல்ல .. ஆட்டோ புடுச்சு வீட்டுக்கு போகணும்,  பெறகு டூயிட்டிக்கு போணும்.. பணத்த ஏற்பாடு பண்ணிட்டு மதியம் வாறேன்.

சுஜீத்த பாத்துக்க ,,

இட்லி வாங்கிக்கொடு…

நீயும் சாப்புட்டுக்க.. சாப்புடாம இருக்காத என கூறிவிட்டு முனியாண்டி வேகமாய் வார்டை விட்டு வெளியேறினான் . காலையிலேயே வெய்யில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு கூட்டம் கூட்டமாய், ஆட்டோவிலும், காரிலும், பேருந்திலும் மனிதர்கள் வந்துகொண்டேயிருந்தனர். கஜாப்புயல் நிவாரணம் கேட்கும் அட்டைகளை  ஏந்திக்கொண்டு பள்ளிக்குழந்தைகள் வரிசையாக  சாலையோரக் கடைகளுக்குள்  சென்று கொண்டிருந்தனர்.

 எப்படியாவது மேனேஜரை பாத்து, கெஞ்சி கூத்தாடியாவது அடுத்த மாச சம்பளப் பணத்துல கழிச்சுக்கன்னு சொல்லி கடன் கேக்கனும்” என மனதில் எண்ணிக்கொண்டான்.  முனியாண்டியின் கரங்கள் பாக்கெட்டில் இருக்கும் ”ஐகார்டு”  பத்திரமாக உள்ளதா என தொட்டுப்பார்த்துக்கொண்டே இருந்தது.

ஆட்டோவை பிடித்து, வீடு போய் சேர்ந்து, அவசர அவசரமாக, உடை உடுத்தி, சூ பாலிஸ் போட்டு, தொப்பியை தேடினான்.

தொப்பி வைத்த இடத்தில் இல்லை, பெட்ரூமில் இருக்கும் கதவிற்கு பின் இருக்கும் ஹேங்கரில்தான் எப்போதும் மாட்டி வைப்பான்,

அங்கு தொப்பி இல்லை..

அவசர அவசரமாக தேடிய இடத்திலேயே மீண்டும் , மீண்டும் தேடினான். கிடைக்கவில்லை..

பிறகுதான் முனியாண்டிக்கு சுஜீத் கழுத்தில் மாட்டிக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் விளையாடியது நினைவிற்கு வந்தது.

அவனது பள்ளிக்கூட பேக்கை தேடி எடுத்து பார்த்தபொழுது தொப்பி இருந்தது..

வேகமாக சூப்பர் மார்க்கெட்டை நோக்கி ஓடினான்.

வாப்பா முனியாண்டி.. நேரம் எவ்வளவு ஆகுது பாரு என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு  டூயிட்டியில் இருந்தவன் கூறினான்.

ஸாரி பாசுஎனக்கூறிக்கொண்டே மேனேஜரின் அறையை நோக்கி ஓடினான் முனியாண்டி.

மேனேஜர் அறைக்கு சென்றதும் சில்லென்றிருந்தது. .சி ஒடுது போல என எண்ணிக்கொண்டு

வணக்கம் சார் எனக்கூறினான்.

வியர்க்க வியர்க்க உஸ்ணம் கூடியிருந்த உடம்போடு ஏ சி ரூமிற்கு வந்ததால்

“தும்மினான்” முனியாண்டி

ச்சீ காலையிலேயே அபசகுணம் போல ஏன்யா தும்முற.. அதென்ன சோல்டர் எல்லாம் ஓரே அலுக்கு ..

இப்படி கேட் முன்னாடி இருந்தையின்னா எவன் கடைக்கு வருவான்என  திட்டினான் மேனேஜர்.

அப்போதுதான் அவசரத்தில் முகத்திலிருந்த வியர்வையை  சட்டையிலேயே துடைத்தது முனியாண்டிக்கு நினைவில் வந்தது.

“ஸாரி சார்” என்றான்.

போ.. போ

வாஸ் பண்ணிட்டு கேட்ல நில்லு..

“சார். பையனுக்கு உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரி செலவுக்கு காசு வேணும் “ என கெஞ்சும் குரலில் பேசினான் .

போய்யா.. டூயிட்டிய பாரு..

முனியாண்டி. நகரவில்லை பவ்யமாக நின்றுகொண்டு மேனேஜரை பார்த்துக்கொண்டேயிருந்தான்.

காலங்காத்தால உசுரவாங்காதையா..

பெறகு கூப்புடுறேன் என தன் முக கண்ணாடியை சரிசெய்து கொண்டே கூறினான் மேனேஜர்.

முனியாண்டி மேனேஜர் அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து  கடையின் பிரதான வாயிலுக்கு வந்தான், டூயிட்டி புத்தகத்தில் பெயர் எழுதி கையெழுத்துப் போட்டான். வாகனங்கள் கரும்புகைகளை உமிழ்ந்து கொண்டும்: புழுதியை கிளப்பிவிட்டுக்கொண்டும் சாலையில் சென்று கொண்டிருந்தது.

காளீஸ்வரி ஆஸ்பத்திரியில்தனியாக இருந்து கஷ்டப்படுகிறாள், பாவம் புள்ள நல்லபடியா குணம் அடைஞ்சுட்டா குடும்பத்தோட ஓஞ் சன்னதிக்கு வர்ரோம் சாமி” என மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்டான் .

 சிறுவனை அழைத்துக்கொண்டு ஒரு வயதானவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை பார்த்த முனியாண்டி ”அப்பாவ போல இருக்கிறாரே”  என முனுமுனுத்துக்கொண்டான் .கிருஸ்ணன் மாமா முன்பு கிராமத்தில் அப்பாவைப் பற்றி சொன்னது இப்போது முனியாண்டிக்கு நினைவில் வந்தது..

டேய் மாப்ள, ஒனக்கு ஆறு வயசு இருக்கும்டா, விடாத காய்ச்சலு, செத்துப்போனவன் போல கெடந்த, அப்பல்லாம் நம்ம ஊருக்கு டவுன்பஸ் இல்ல..  டவுனுக்கு போகனுமுன்னா பத்து  கிலோமீட்டர் தூரத்துல இருக்குற அதிகாரிபட்டி வரைக்கும் வந்துதான்  கண்ணாத்தாள்  பஸ்ஸ புடிக்கனும். ஒங்கப்பா மாட்டு வண்டிய கட்டிக்கிட்டு ஒன்னைய காப்பாத்துரதுக்கு பட்ட பாடு எனக்கு மட்டும்தான் மாப்ள தெரியும்”..

நம்மள போலதானே அப்பாவும் கஷ்ட்டப்பட்டிருப்பார்.. பாவம் இந்த வயசான காலத்துல இப்பவும் தனியா கஷ்ட்டபடுறாரே..

சுஜீத்துக்கு சரியானப்புறம் கிராமத்துக்கு போய் அப்பாவை பாத்துட்டு வரணும்  அப்பாவ சமாதானப்படுத்தி கூடவே வச்சுக்கிரனும்..  என எண்ணிக்கொண்டான்

வெய்யில் உச்சிக்கு வந்திருந்தது, மேனேஜர் அழைப்பார் என்ற நம்பிக்கையில்  மேனேஜரின் அறையை அடிக்கடி முனியாண்டியின் கண்கள் பார்த்துகொண்டேயிருந்தது..

கைப்பேசியில் இளையாராஜாவின் பாடல் ஒலித்தது..

பதட்டத்தோடு, மேனேஜர் போன் பேசுவதை பார்க்காதபடி சுவர் மறைவிற்குச் சென்று

ஹலோ  ”சொல்லுமா.. சொல்லுமா” என்றான்

மறுமுனையிலிருந்து காளீஸ்வரியின்  ஓ வென்ற அழும்குரல் மட்டும் கேட்டது“.

-முற்றும்-

4 Responses so far.

 1. நான் மிகவும் ரசித்த கதை கணையாழியில்…
  பார்த்ததுமே அத்தனை சந்தோஷம்….
  மேலும் மேலும் சிறப்பு சேரட்டும்…
  அன்பு வாழ்த்துக்கள் …👍👍🎉

 2. கிராமத்து வாழ்க்கையின் நினைவுகள் கபங்களாக நெஞ்சை விட்டு அகலாமல் நகா்புற வாழ்க்கை ருசிக்காமல் …என்ன வாழ்க்கை. இழப்புக்களால் ஏற்படும் நினைவுகள்தான் வாழ்க்கையோ… எழுத்து பிழை தவிா்க்கவும். nice story.. keep it up.

 3. சிறப்பான கதை.நடப்பியலோடு பிணைந்த சீரான ஓட்டம்.வாழ்த்துக்கள் விட்டலன்

 4. யதார்த்தமான கதை… சிறப்பான நடை… வாழ்த்துக்கள்..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube