இரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் , தரிசனத்தையும் தந்துகொண்டுதான் உள்ளது. அரோணி எக்ஸ்பிரஸில் வெஸ்ட்பெங்காளிலிருந்து ஊருக்கு திரும்புகையில் இரண்டாம் வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன். கோச் முழுவதும் அதீதமான கூட்டம் நிரம்பியிருந்தது. பதின்பருவ இளைஞர்கள்தான் அதிகம் இருந்தனர். அந்தக்கூட்டத்தில்தான் சுதீப்பை சந்தித்தேன். சுதீப் மேற்குவங்கத்தைச்சேர்ந்தவன். பணிக்காக திருவணந்தபுரம் செல்கிறான். அவனோடு பேசியதில் அவனொரு பெயிண்டர் என்பதை அறிந்துகொண்டேன்.
உயரமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூச நம் ஊர் காண்ட்ராக்டர்கள் குறைந்த ஊதியத்திற்கு இவர்களைப் பயண்படுத்திக்கொள்கின்றனர். இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகள் போல் நல்ல வளர்ச்சியை கிழக்கு நகரங்கள் இன்னும் அடைந்துவிடவில்லை.
திரிபுரா, நாகலாந்திலிருந்தும் பல இளைஞர்கள் இரயிலில் பயணித்துவருவதைக்கண்டேன். கையில் தஸ்தயேவ்ஸிகியின் நாட்குறிப்புகள் வைத்துப்படித்துக்கொண்டிருந்தேன். அவரது நாட்குறிப்பில் இரண்டாவது மனைவி, முதல் மனைவியின் குழந்தையை ஜன்னலிலிருந்து தூக்கிவீசி கொலை செய்ய முட்யற்சிக்கிறாள். தெய்வாதீனமாக குழந்தை தப்பிப்பிழைத்துக் கொள்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அந்தப்பெண்ணை சிறையில் அடைக்கின்றனர்.
தஸ்தயெவ்ஸ்கி அந்தப்பெண்ணின் நிலையை அவளது சூழ்நிலையிலிருந்து ஆராய்கிறார். அந்தக்குற்றத்தை செய்யும்பொழுது அவள் கற்பமாக இருந்துள்ளாள் ஆதால் அவளுக்கு உண்டான உளச்சிக்கலினால் இந்த தவறை அவள் செய்திருக்கலாம் என்கிறார்.
இங்கே தவறுகளை ஒருப்பக்கத்திலிருந்து பார்க்கும் பழக்கமே நம்மில் அதிகம் உள்ளது. குற்றம் என்று ஒன்றைப்பார்க்கும் பொழுது, குற்றத்தின் நடைபெற்ற சூழலையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும்.
இங்கு முழுமையான நல்லவர்கள் என யாரையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நன்மையும் தீமையும் கலந்துதான் உள்ளது.
சுதீப்பை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டேன். மீண்டும் அரோணி எக்ஸ்பிரஸிற்கே வருகிறேன். சுதீப் பத்தாம் வகுப்புவரை படித்துள்ளான். வீட்டில் அப்பா இல்லை, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளார்கள் என்றான்.
ஏன் இவ்வளவு தொலைவு பயணித்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன எனக்கேட்டேன்..
இல்ல சார்..
இங்கே இதே வேலையை செய்தால் அதிகமாக 300 ரூபாய் தினத்திற்கு தருகிறார்கள். ஆனால் அங்கு அப்படி இல்லை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்வரை கிடைக்கிறது.
வருடத்திற்கு ஓரிருமுறை வீட்டிற்கு வருவோம் . மாதமாதம் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என்றான். மேற்குவங்கம் அஸ்ஸாம் மாநிலத்தைப்போல்தான் கேரளாவும் உள்ளது. பசுமையான மரங்கள் முதல் நிறைய விசயங்கள் ஒன்றாகத்தான் உள்ளது.
அம்மாவிடன் நான் பெயிண்ட் அடிக்கும் வேளையில் உள்ளேன் எனக்கூறவில்லை அம்மா வருத்தப்படுவாள். பெரிய கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக உள்ளேன் எனக்கூறியுள்ளேன் என்றான்
இரயில் ஜன்னலின் வழியாய் தென்றல்காற்று வீசிக்கொண்டிருந்தது. இரயில் வேகமாக ஆற்றுப்பாலத்தின் மீது பயணித்துக்கொண்டிருந்தது இந்த வாழ்க்கையைப்போல,,