வாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில் நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை.
சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில் சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எம்.வி.வெங்கட்ராம் அவர்கள் எழுதிய “காதுகள்” என்ற நாவலைப்படித்தேன். ” மகாலிங்கம்” என்ற கதாப்பாத்திரத்தை மையமாகக்கொண்டதுதான் நாவல். மகாலிங்கத்தின் குடும்பம் நன்றாக வாழ்ந்த குடும்பம். மகாலிங்கத்தின் அப்பா நன்றாக தொழில்செய்து வாழ்க்கையில் பல செல்வங்களை அடைகிறார். மகாலிங்கம் நன்றாக படித்து ஒரு கட்டத்தில் எழுத்தாளனாக மாறுகிறான், அவனது கதைகள் பத்திரிக்கைகளில் வெளிவருவதைக்கண்டு அப்பா மகிழ்ச்சியடைகிறார். மகாலிங்கத்திற்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.
திருமணத்தில் நாட்டமில்லாமலிருக்கும் மகாலிங்கம் ஒரு தருணத்தில் அப்பாவின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு “ உங்கள் விருப்பம் அப்பா” நீங்கள் பார்த்து எந்த ஒரு பெண்ணை கட்டிவைத்தாலும் சம்மதிக்கிறேன் என்கிறான். திருமணம் நடைபெறுகிறது. காலங்கள் ஓடுகின்றன. நன்றாக சென்றுகொண்டிருந்த வியாபாரம் நஷ்ட்டமடைந்ததால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அப்பா இறக்கிறார். வீட்டில் உள்ள பொருட்களனைத்தையும் விற்றுசாப்பிடக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
அத்தை வந்து மனைவியை அவர்களது வீட்டிற்கே அலைத்துச்சென்றுவிடுகிறாள். மகாலிங்கத்தின் வாழ்க்கை பெரும் மனக்குழப்பத்தோடு கழிகின்றது. அப்போதுதான் அவனுக்குள் இருக்கும் மாலி பேசத்துவங்குகிறான். மாலிக்கு காதுகளில் ஆபாசக்குரல்களாக கேட்கின்றது. மாலியை பிரம்மமாக்க காளி முயற்சிக்கிறாள். மாலியின் காவல்தெய்வமான முருகன் அவனைக்காத்து நிற்கிறான். இப்படி பல குரல்கள் நாவலில் எழுந்து நாவல் அகமனதின் குரல்களாக ஒலிக்கத்துவங்குகின்றன,
ராமன், கறுப்பன் என மாலிக்குள் இருந்து பல குரல்கள் கதாப்பாத்திரங்களாக பேசத்துவங்குகின்றனர்.
இவன் என்னை நான் என்பான், நான் இவனை நான் என் என்பேன். எனக்கூறி நாவலை முடிக்கிறார்.
எம்.வி.வெங்கட்ராம் அவர்கள் எழுதியுள்ள இந்த நாவல் அவருக்கு சாகித்திய அக்காதெமி விருதை பெற்றுத்தந்துள்ளது.
அற்புதமான நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்