ஊர்சுற்றிப் புராணம்
ஊர்சுற்றுதல் என்பது எல்லோருக்கும் வாய்பதில்லை. இலக்கற்றுப் பயணிக்கும்போது பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று சில தினங்கள் சாமியார்களுடன் சேர்ந்து அலைந்துதிறிந்துள்ளேன். அப்போது ஏற்பட்ட உணர்வினை ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் ஊர்சுற்றிப் புராணம் நூலைப் படித்தபோது உணரமுடிந்தது.
இந்தப் புத்தகம் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற புத்தகம். 16 அத்தியாயங்கள் கொண்ட இப்புத்தகத்தை மிகவும் ஆராய்ந்து, தன் அனுபவங்களையும் சேர்த்து பதிவு செய்துள்ளார் ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள். இப்புத்தகத்தை பல அரிய தகவல்களை உணர்ந்துகொள்ள முடிகிறது. நீண்ட பயணத்தை செய்ய நினைக்கும் நபர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
ஒரு ஊர்சுற்றி எப்படி தன்னளவில் தன்னை தயார்செய்துகொண்டு பயணிக்க வேண்டும் என்பதையும். நல்ல ஊர்சுற்றி எப்படி தன் சிந்தனைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் அழகாக விளக்குகிறார். பெண்களும் ஊர்சுற்றியாக இருக்கலாம். பெண்கள் 3 பேராக சேர்ந்து பயணிப்பது நலம் என்கிறார்.
சிறுவயதிலேயே வீட்டைத்துறந்து பயணிக்கத்துவங்கிய ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் தன் வாழ்வின் பெரும்பகுதியை பயணத்திலேயே கழித்துள்ளார். திபெத், ரஷ்யா, ஈரான், ஐரோப்பிய தேசங்கள் , இலங்கை உள்ளிட்ட பல தேசங்களுக்கு பயணித்துள்ளார். 36 மொழிகள் தெரிந்தவராயிருந்துள்ளார். இவரது இயற்பெயர் கேதர்நாத் பாண்டே. உத்திரப்பிரதேசத்திலுள்ள அஜம்கட் ஜில்லாவிலுள்ள பனாகட் கிராமத்தில் பிறந்துள்ளார். அறிவுத்தேடலில் இவரது நீண்ட பயணங்கள் தொடங்கின.
17 முறை இமையமலைப்பகுதிகளுக்குச் சென்று தங்கி சுற்றியுள்ளார். ஊர்சுற்றிப் புராணத்தில் இமயமலைப் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன, தேவதாரு மரங்கள், பனிகள் என பல குறிப்புகளைக் கொடுத்துள்ளார். பயணத்தின் சிறப்பையும், பயணம் நமக்கு கற்றுத்தரும் அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தின் வாயிலாய் உணர்ந்துகொள்ள முடிகிறது.
எல்லோரையும் ஊர் சுற்றியாக மாற்றுவது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல, ஊர் சுற்ற நினைப்பவர்களுக்கு ஆத்மபலத்தையும், அனுபவத்தையும் தருவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார்.
இராஜஸ்தானிலிருந்து, திருச்சிராப்பள்ளி வரை செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸில் ஜன்னல் வழியாய் கடந்து செல்லும் காட்சிகளையும், ஊர்சுற்றி புராணத்தையும் படித்துமுடித்தேன். அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
யூடியூப்பில் இந்தப்புத்தகத்தைப் பற்றி தெளிவான வீடியோ உள்ளது.
https://www.youtube.com/watch?v=ceR_FN8xpT0
NCBH இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்