பாஸ்கல் (PASCAL) பள்ளிக்குச் செல்லும்போது கயிறுகட்டப்பட்ட ரெட்பலூன் ஒன்று கம்பத்தில் சிக்கிக்கொண்டிருப்பதைக் காண்கிறான். கம்பத்தில் ஏறி பலூனை எடுத்து தன்னோடு கொண்டு செல்கிறான். பேருந்தில் பலூனோடு ஏற முயற்சிக்கும் பாஸ்கலை நடத்துனர் பேருந்தில் ஏற மறுதலிக்கிறான். ஏமாற்றத்தோடு நின்றிருக்கும் பாஸ்கல், பின் வேகமாக பலூனைப் பற்றிக்கொண்டே நகரத்தினூடே ஓடியே பள்ளியை வந்தடைகிறான். பள்ளிக்குள் துப்பரவுப் பணி செய்துகொண்டிருக்கும் பெரியவரிடம் பலூனைக் கொடுத்து பலூனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் எனக் கூறிவிட்டு தன் வகுப்பிற்குள் செல்கிறான். பள்ளி முடிந்ததும் பலூனைப்பெற்றுக்கொண்டு நகரத்தில் நடந்து வரும்போதுதான், அந்த ரெட் பலூன் தன்னோடு விளையாடுவதை உணர்கிறான். ரெட் பலூன் பாஸ்கலின் பேச்சைக்கேட்டு அவன் இடும் கட்டளைக்குப் பணிந்து நடக்கிறது. பாஸ்கல் வீடு வந்தடைகிறான். பாஸ்கல் பலூனோடு வீடு வருவதைப் பார்க்கும் பாட்டி , அந்த ரெட் பலூனை ஜன்னல் வழியாக பாஸ்கலுக்குத் தெரியாமல் பறக்க விடுகிறாள். பலூன் ஆகாசத்தில் பறந்து போகாமல் பாஸ்கலின் வீட்டுச் சுவரின் அருகிலேயே பறந்து கொண்டுள்ளது.
ஜன்னலுக்கு வெளியே பறந்து கொண்டிருக்கும் ரெட் பலூனை மீண்டும் தன் வீட்டிற்குள்ளேயே கொண்டுவருகிறான் பாஸ்கல், மறுநாள் பள்ளிக்குச்செல்லும் போது ரெட் பலூனைப் பறக்கவிட்டு விட்டுச் செல்கிறான் , ரெட் பலூன் அவனைத் தொடர்ந்துகொண்டு வருகிறது.
இம்முறை பேருந்தில் பாஸ்கலை ஏற்றிக்கொள்கிறான் நடத்துனர். பள்ளியில் பலூனைப் பார்த்தவுடன் மற்றக் குழந்தைகளும் துள்ளிக்குதித்து பலூனோடு விளையாடுகின்றனர். பள்ளிக்கு பலூனைக்கொண்டுவரும் பாஸ்கலை ஆசிரியர் கண்டிக்கிறார். பாஸ்கலைத் தனி அறையில் பூட்டி வைத்துவிட்டு வெளியில் செல்கிறார். ரெட் பலூன் அவரைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. பின் மாலையில் பாஸ்கலை அடைத்து வைத்திருந்த அறையை திறந்து விட்டு திட்டி அனுப்புகிறார்.
பாஸ்கல் பலூனைப் பற்றிக்கொண்டு நகரத்தில் நடந்து செல்கிறான். ரெட் பலூன் பாஸ்கலோடு விளையாடிக்கொண்டே நகரத்தில் அவன் பின்னேயே பறந்து செல்கிறது. நகர மக்கள் சிறுவனைப் பின் தொடர்ந்துச் செல்லும் பலூனை அதிசயத்துடன் பார்க்கின்றனர்.
துடுக்கான சிறுவர்கள் சிலர் சேர்ந்துகொண்டு பாஸ்கலின் பின் செல்லும் பலூனைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். பாஸ்கல் பலூனைப் பற்றிக்கொண்டு தன் சக சிறுவர்களிடம் சிக்காமல் ஓடுகிறான். அவர்களிடம் சிக்காமல் ரெட்பலூனை அன்று காப்பாற்றிவிட்டான். பின் பாட்டியோடு தேவாலயம் அழைத்துச்செல்கிறாள் அவனைப் பின் தொடர்ந்து வரும் பலூனைப் பற்றிக்கொண்டு பாதியிலேயே தேவாலயத்தை விட்டு ஓடிவருகிறான். சாலையோரத்தில் நடந்துவரும் போது பாஸ்கல் ஒரு ரொட்டிக்கடையைப் பார்க்கிறான். ரெட் பலூனை கடை வாசலில் விட்டுவிட்டு ரொட்டிக்கடைக்குள் சென்று ரொட்டி வாங்க செல்கிறான். அந்த சமயத்தில் அங்குவரும் அந்த துடுக்கான சிறுவர்கள் கையில் பலூன் சிக்கிக் கொள்கிறது. அந்த ரெட்பலூனை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் ஓடுகின்றனர். கடையிலிருந்து வரும் பாஸ்கல் ரெட்பலூன் அங்கு இல்லாததைக் கண்டு ஏமாற்றத்துடன் தேடுகிறான். தன்னோடு அன்பாய் இருந்த அந்தப் பலூனைக் காணமால் அவன் மனம் ஏக்கத்தில் ஊசலாடுகிறது. ஒரு இடத்தில் அந்த ரெட்பலூனை சிறுவர்கள் கற்களால் எறிந்து விளையாடுவதைப் பார்க்கிறான். அவர்களிடமிருந்து அந்த பலூனைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான் பாஸ்கல். துடுக்கான சிறுவர்கள் பலர் சேர்ந்துகொண்டு இம்முறை பாஸ்கலை விரட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் பலூனை அவனிடமிருந்து பறிக்கும் சிறுவர்கள் பலூனை கற்களால் எறிந்து காயப்படுத்துகின்றனர். காயப்பட்ட ரெட்பலூன் கொஞ்சம் கொஞ்சமாக தன் பறக்கும் திறனை இழந்து தரையில் வீழ்கிறது. பாஸ்கல் ஏக்கத்துடன் நிற்கிறான். அந்த கணத்தில் நகரத்தில் உள்ள எல்லா பலூன்களும் பறந்து ஆகாசத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து பாஸ்கலிடம் வந்து சேர்கின்றன.
பாஸ்கல் தன்னை நோக்கி வரும் வண்ண வண்ண பலூன்களை ஆவலோடு பற்றிக்கொள்கிறான். பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி பாஸ்கலை ஆகாசத்தில் தூக்கிச் செல்கிறது.
தூய பால்ய அன்பின் மகிமையை வெளிப்படுத்தும் அற்புதமானத் திரைப்படம். காட்சி அமைப்புகளும் பலூன் பாஸ்கலோடு நகரத்தில் பறந்துவரும் காட்சியும், படத்தின் இறுதியில் ஆகாசத்தில் பறந்து பாஸ்கலைத் தேடிவரும் பலூன்களின் அணிவகுப்பும், பின்னனி இசையும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் Albert Lamorisse . சிறுவனாக தன் மகன் Pascal Lamorisse நடிக்க வைத்திருக்கிறார்.
உலக சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது நம் பால்யகாலங்கள் மனதில் பிம்பமாய் விரிவதை யாரும் தவிர்க்க இயலாது. கள்ளங்கபடமில்லாத நேசிப்பு மிகுந்த பால்ய காலம் சொர்கம்தானே?.