சிட்டுக்குருவியொன்று வெய்யில் தகிக்கும் இராஜஸ்தானின் நண்பகல் வேளையிலும் தன் கூட்டிற்காக , சிறு சிறு குச்சிகளை சேகரித்துக் கொண்டு கருவேலமரங்களினூடே இங்கும் அங்குமாய் உற்சாகமாய் பறந்துக்கொண்டிருந்தது. சாலை நெடுகிலும் நிறைந்திருக்கும் கருவேலமரங்களின் நிழல்கள் அழகிய ஓவியங்களாய் சாலையின் மீது படிந்திருப்பது கேசவனின் கண்களுக்கு அழகாய்த் தெரிந்தது. தூரத்தில் இராணுவ வீரர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் மஞ்சள் வர்ண அழகிய  குடியிருப்பு வீடுகளை கேசவன் ஏக்கத்துடன் பார்த்தான். இந்தக் கொரோனா நோய்த் தொற்று வந்ததிலிருந்து இராணுவ முகாமிற்கு வெளியே தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கேசவனுக்கு மனைவியை உடனே உடன் அழைத்துவந்து வைத்துக்கொள்ள இயலவில்லை , முகாம் உள் குடியிருப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது . சாலையோரத்திலிருக்கும் மணல்மேட்டிற்கு அருகில் இராணுவ வீரர்கள் பீரெங்கி வண்டிகளை பளுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

”டேய்..  டேய் … டேய் கேசவா”..   

”என்னடா , பெரிய யோசனையில இருக்க “ என்றான் சக இராணுவ வீரனும், நண்பனுமான வெங்கட்.

”அதெல்லாம் ஒன்னுமில்லடா ”

”கேசவா, ஏங்கிட்டையே ஏன் மலுப்புற”

”விடு கேசவா. வேமா உனக்கு இருக்குறப் பிரச்சனைத் தீர்ந்துடும்”

“ இந்தக் கொரோனாப் பிரச்சனை எப்பத் தீருமோ அப்பதான் என் பிரச்சனையும் தீரும்”

”தினமும் பெருமாளக் கும்புடு,கண்டிப்பா ஒனக்கு நல்லது நடக்கும்”

“யாரு நம்ம அதிகாரி அழகுப் பெருமாளையா” எனப் புன்னகைத்தவாறேக் கேட்டான் கேசவன்.

“ இந்த மதுரக் குசும்புதான வேணாங்குறது”

”சாமி பெருமாள,  த கிரேட் லாட்  பெருமாள”

“எங்க அம்மா லீவுக்குப் போனப்ப  குலசாமிக் கோவில் திருநீறு கொடுத்தாங்க, மனசுல சாமிய வேண்டிக்கிட்டு தினமும் காலையில திருநீரை எடுத்துப்பூசிக்க ; மனசுத்தெம்பா இருக்கும்” எனக் கூறிக்கொண்டு தன் ஆருயிர் நண்பனின் தோள்களைப் பாசத்துடன் தொட்டு அரவணைத்தான் வெங்கட். இராணுவ வீரர்களை காவல் பணிக்குச் சுமந்துச்செல்லும் இராணுவ வண்டி மணல் நிறைந்த மஞ்சள் வர்ணப் பிரதேசமான இராஜஸ்தானில்   மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.

*****

ஜன்னலின் வழியாக வந்து தன் முகத்தை  ஸ்பரிசிக்கும் தென்றல்  காற்றினால் நித்திரைக் கலைந்தாலும், கண்களை மூடிக்கொண்டு கணவன் கேசவனின் அன்பான முத்தத்திற்காகவும், அவன் சரியான விகிதத்தில் கலந்துத் தரும் சுவையான காப்பிக்காகவும் படுக்கையிலேயே கண்களை மூடித் துயில்கொள்வது போல் பாசாங்குச் செய்தாள் அதிர்ஷ்ட லட்சுமி. சிறிதுக் கணத்தில் தன் கணவன் கேசவன் அருகில் வருவது போல் உணர்ந்தாள். அந்த அதிகாலையில் கணவன் கொடுக்கும் நேசம் மிகுந்த முத்தத்திற்காக ஏங்கினாள். வெட்கத்தில் புன்னகைத்தாள்”.அவள் புன்னகை அமாவாசை இரவில் தீடிரென ஒளிரும் வெளிச்சம்போல் பிரகாசமாயிருந்தது.

“ஏய் என்ன கனாக் கண்டுட்டுச் சிரிக்கிறவ.. எந்திரிச்சி வாசத்தெளிச்சிக் கோலம்போடு இன்னைக்குத் தோட்டத்துல வேலையிருக்குத் தெரியுமில்ல”. இந்தப் பாலாப்போன கொரோனா வந்ததிலருந்து  தோட்டத்து வேலைக்கும் ஆள் கிடைக்கிறதுல்ல”. எல்லா வேலையையும் நானே செய்ய வேண்டியதாயிருக்கு. இந்த வயசானக்காலத்துல எனக்குத் தேவையா? இந்தக் கவலையெல்லாம் உனக்குத் தெரியுதா?

“ஆம ஒனக்கென்னத் தெரியும், நீதான் பகலுலையே கனாக்காணுவள்ள, எந்திரிச்சி வேலையப்பாரு”

“ காப்பியக்கொஞ்சம் சேத்துப்போடு பக்கத்துவீட்டு பர்வதம் அத்தைக் காலையிலேயே வீட்டுக்கு வந்து திண்ணையில ஒக்காந்துருக்கா வெருசா எழுந்து வா” எனத் தனக்கொடிப் பாட்டித் தொட்டுக் கூறியபின்தான்,  தான் கண்டது வழக்கம்போலானக் கனவு என்பதை உணர்ந்தாள். தன் நிலையை நினைத்து வெட்கிப் புன்னகைத்தாள்.

“பாக்கியம் அத்தே காலையிலக் கண்டக் கனா பலிக்குமுன்னு சொல்லுவாங்கல்ல ” எனக் கண்களை கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்தவாறேச் சப்தமாகக் கேட்டாள்.

இவ ஒரு ”பொசகெட்டக் கழுத”  காலங்காத்தால  எந்திருச்சிட்டுக் கேள்வியப்பாரு எனக் கேலி செய்துகொண்டே தன் பொக்கை வாயைத் திறந்து சப்தமாகச் சிரித்தாள் பாட்டி.

” போம்மா போயி காப்பித்தண்ணி போட்டுக்கொண்டா  ராசாத்தி “

“உங்க வாத்தியார் மாமா வாக்கிங்குப் போயிருக்காப்ள வந்தவுடனே காப்பியக் கேப்பாரு உனக்குத்தான் தெரியுமில்ல..

ஓங் கைப்பக்குவத்துல கலந்துத்தற காப்பின்னா விரும்பிக் குடிப்பாரு மனுசன்

எந்திரிச்சு வேலையப்பாருத் தாயி” என  மருமகளிடம் கெஞ்சலாகக் கூறினாள் அத்தை பாக்கியம் .

தன் கைப்பேசியை எடுத்துக் கேசவனின் படத்திற்கு முத்தம் தந்தாள். இராணுவத்தில் பணியில் இருக்கும் கேசவனிடம் அவளுக்கு அதிகம் பிடித்தது, அவனுடைய அந்த முறுக்கிய அடர்த்தியான கருகருத்த மீசைதான்.

” ஆம்பளைக்கு அழகே மீசைதானே மாமா”

நீ ஏன் மீசையப்போயி ஷேவ் பண்ணிட்டு லூசு மாதிரி சுத்துற” எனக் கேசவன் ஒரு முறை மீசையை மழித்தபோது கோவித்துக் கொண்டவள்தான் அதிர்ஷ்ட லட்சுமி.

பின் தன் ஆசை மனைவி அதிர்ஷ்ட லட்சுமிக்காகவே மீசையை மேலும் முறுக்கி வைத்துக்கொண்டான் கேசவன்.  அதிர்ஷ்ட லட்சுமி பிறந்தது முதல் திருமணமானது வரை உறவுகள் நிறைந்த சூழலிலேயே வாழ்கிறாள்.  அவள் தன்  பதின் பருவத்திலிருந்தே அடிக்கடி அம்மா தன்னைத் திட்டும்போது

“கல்யாணம் ஆனப் பின்னாடி புருசனோட தனியாப் போயிருவேன்”

“இந்த தொந்தரவே வேண்டாம்”.

 எப்பப் பாரு இந்த வீட்ல அமைதியா, கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியுதா?

 கல்யாணம் ஆனப்புறம் புருசன், குழந்தைன்னு இருக்கனும்.

இந்தப் பிக்கல் பிடுங்கலவிட்டு தூரப்போயிடனும்” எனக் கூறுவாள்.

”இப்ப தெரியாதுடி உனக்கு உறவுகளோட மவுசு ; தனியா கெடந்து அல்லல் படுறப்பத் தெரியும்” என அம்மா கூறும்போது தன் நீண்ட அடர்த்தியானச் சடையை சுழட்டிக்கொண்டும், முகத்தை திருப்பிக்கொண்டும் தன் அம்மாவை நக்கலான பார்வைப் பார்த்தபடி கடந்துச் செல்வாள்.

”போடிப் போ உனக்கு செல்லம் கொடுத்து வளத்து வச்சுறக்க அந்த மனுசனச் சொல்லனும்”.

நீ பொறந்த அன்னைக்கு பரம்பரைச் சொத்து மேல  நடந்த கேசுல அவருப்பக்கம் தீர்ப்பு வரவும் நீ பொறந்த யோகம்தான் சொத்தக் கொண்டுவந்துச் சேத்துருச்சுன்னு சொல்லிட்டு உனக்கு அதிர்ஷ்ட லட்சுமின்னு பேரு வச்சாப்ள அந்த மனுசன்.

”தினமும் ராத்திரி சரியான தூக்கமில்லாம்ம நீ கல்யாணம் செஞ்சுப் போற இடத்துல நல்லா இருக்கனுமுன்னு  அவரு புலம்பித்தள்ளுறது உனக்கெங்க தெரியப்போகுது”.

 தன் திருமண வாழ்க்கையைப் பற்றி பல கனவுகளைக் கொண்டிருந்தாள் அதிர்ஷ்ட லட்சுமி. அதில் மிக விசேசமானது கணவனோடு தனியாக உறவுத் தொந்தரவுகள் அதிகமின்றி சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டாள்.

” திவ்யா அக்காவப் போல என்னையும் கஷ்டப்பட வச்சுறாதம்மா”

சம்பாதிக்கப் போன புருசன் ரெண்டுவருசமா வீடு வரல, பாவம் திவ்யா அக்கா குழந்தைய வச்சுகிட்டு எவ்வளவு கஷ்ட்டப்படுது, இந்தக் கொரோனா காலத்துல சிக்கி தவிக்குறாங்க, எனக்கெல்லாம் இந்த நிலமை வரக்கூடாது சொல்லிப்பூட்டேன். புருசனோட சேர்ந்துதான் இருப்பேன் வெளி நாட்டுக்காரெங்க, மிலிட்டிரிக் காரெங்க நமக்கு சரிப்பட்டு வராது “

”உள்ளூருலயே வேலை பாக்குற ஆபிஸராப் பாருங்க”

” ஆமா நீ படுச்ச பத்தாப்புக்கு உனக்கு கவுருமெண்டு ஆபிஸரு வேணுமாக்கும் “

பேசாம நம்ம கணக்கு வாத்தியார் ரெண்டாவது மகன் கேசவன் பட்டாளத்துல இருக்கான்ல அவனக் கட்டிக்க , அமைதியானப் பைய, அவன்தான் நம்மக் குடும்பத்துக்கு கரெக்டா இருப்பான். ஊருக்குள்ளேயே மரியாதையா, உறவுக்காறங்கள்ளாம் ஒத்துமையா சேர்ந்து வாழுற குடும்பம்னா அது வாத்தியார் குடும்பம் மட்டும்தான். அதனால நமக்கு அந்தக் குடும்பம்தான் சம்பந்தம் பண்ணக் கரெக்டா இருக்கும்”

அவ்வேளையில் போமா  வேலையப்பாத்துகிட்டு என  வீராப்போடு சொல்லிவிட்டு அதிர்ஷ்ட லட்சுமி சென்றாலும் , அதிர்ஷ்ட லட்சுமிக்கு கேசவன் மீது பள்ளிக்காலத்திலிருந்தே பிடிப்பு இருப்பதை அம்மா அழகு  உள்ளுக்குள் உணர்ந்துதானிருந்தாள்.

ஏனோ இன்று கணவனின் போட்டோவைப் கைப்பேசியில் பார்த்ததும் அவளுக்கு தான் அம்மாவிடம்  முன்பு பேசிய பேச்சுகள் நினைவில் வந்து, கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது. இனியும் வந்து உடன் அழைத்துச்செல்லவில்லை .கேசவனை நினைத்தால்  அதிர்ஷ்ட லட்சுமிக்கு இப்பொழுதெல்லாம் ஏக்கம் போய் எரிச்சல் வந்தது.

“இன்னைக்கு போன் செஞ்சு ரெண்டுல ஒன்னு கேக்கனும்”

டேய் மீசைக்காரா ஏமாத்திக்கிட்டா இருக்க எனத் தனக்குத்தானே புலம்பிக்கொண்டாள்.

*******

“உன்னக் கட்டிப்பிடிச்சுகிட்டு தாஜ்மஹால், முன்னாடி போட்டோ எடுக்கனும்னு” சொன்ன லட்சுமியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து  கேசவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது.

மணல்வெளி நிறைந்த பாலைக்குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. “என்னாக் குளிரு கேசவா எங்க அப்பா அப்பையே சொன்னாப்ள ஒழுங்காப் படிடான்னு, எங்க கேட்டேன் அப்ப அவருப்பேச்சக் கேட்டிருந்தா  அதிகாரியா ஆயிருப்பேன். சரி விடு நம்ம தலையெழுத்து இந்த புழுதி மண்ணுல பொறழனும்னு எழுதியிருக்கு” எனக் கூறிக்கொண்டே மணல் ஏறியிருந்த தன் சூவை பிரஸால் தேய்த்துக்கொண்டிருந்தான் வெங்கட்.

வாழ்க்கையில எல்லாத்தையும் ரசிச்சு பழகுங்கடா இந்த அழகான மஞ்சள் மணல் வெளி, இழந்தையும், கருவேல மரங்களும் நிறைஞ்ச பாலைக்காடு, காட்டுக்குள்ள ஓடித்திரியுற மானுங்க , மணல் குன்றுக்கு பின்னாடி உதிச்சு மறையும் சூரியன். வண்டிகளை இழுத்துச்செல்லற ஒட்டகங்கள் என  எவ்வளவு அழகு இருக்கு இந்த இராஜஸ்தான் பூமியில. எதையும் பாஸிட்டீவா யோசிங்கடா” எனக்கூறினான் சூரியப்பாண்டி.

”டேய் ஓங்கிட்டப்பேசி ஜெயிக்க முடியுமா நீதான் பள்ளிக்கூடத்துலருந்தே மைக்கிலப் பேசிப்பழகினவனாச்சே” என்றான் வெங்கட்.

இவர்களிருவரின் பேச்சையும் மனதில் வாங்கிக்கொண்டு அமைதியாய் புளுதிப் பறக்கும் மணல்வெளியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கேசவன்.

” டேய் என்னாச்சு, ஏதோ தொலைச்சவன் போல ஒக்காந்துக்கிட்டிருக்க” எனக் கேசவனின் கைகளைப்பற்றிக்கொண்டு உளுக்கினான் வெங்கட்.

“என்ன எப்ப கூட்டிட்டுப்போவ, கல்யாணமாகி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு”

“நீ என்னை வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் என்கிட்ட பேசாத” என வாட்சப் செய்திருந்தாள் அதிர்ஷ்ட லட்சுமி.

“தேசத்திற்காக உறவுகளைப் பிரிந்து வேலைப் பார்க்கிற நமக்கு உறவுகள்தானே பெரிய பலமாய் இருந்து ஒத்துழைப்பு கொடுக்கனும். அவங்களே இப்படி தாம் தூமுன்னு குதிச்சா நம்ம மனசுத்தாங்குமா?” சரி கேசவா இதுக்கெல்லாம் வருத்தப்படாத! எல்லாம் சரி ஆயிடும் .

“இதயம்” முரளி மாதிரி பீல் பண்ணாம “நான் அவன் இல்லை” ஜீவன் மாதிரி  எஞ்ஜாயா இரு கேசவா” என்றான் வெங்கட்.

அப்ப கேசவனை பொம்பளப் பொறுக்கியா இருக்கச்சொல்றியா? என வெங்கட்டைப் பார்த்து அருகில் இருந்த இழந்தைப் பழத்தைப் பிடுங்கி வெங்கட்டின் மேல் எறிந்தவாறேக் கேட்டான் சூரியப்பாண்டி.

இல்லை மச்சான் நான் அப்படி சொல்லல, அவன  ”டேக்கிட் ஈஸியா” இருக்கச்சொன்னேன் என சிரித்துக்கொண்டேக் கூறினான் வெங்கட்.

நான் இங்க நொந்துக்கிட்டிருக்கேன். நீங்க என்னவச்சு அரட்டை அரங்கமா நடத்துறீங்க எனச் சிரித்தவாறு அவர்களை விரட்டுவது போல் பாவனைச் செய்தான் கேசவன். வெங்கட்டும் , சூரியப்பாண்டியும் மணல் மேட்டிலிருந்து கேசவனின் முரட்டுக் கைக்குள் பிடிபடாதவாறு புன்னகைத்தவாறே ஓடினர்.   மென்மையான வெண்புழுதி மணல் காற்றில் மேழெலும்பிப் பறந்துக்கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் மறையத்துவங்கியநேரம் வானம் செந்நிறக் கோலம் பூண்டிருந்தது.

*******

தூரத்தில் மணல் மேட்டில் மான் கூட்டங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.இராணுவ வண்டிகள் சாலையில் எறும்புபோல் சீராக வந்துகொண்டிருந்தது. ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என நினைத்த யுத்தப் பயிற்சி இரண்டு மாதங்கள் நீடித்துவிட்டது, இன்னும் முகாமிற்குள் வீடு கிடைக்கவில்லை, மனைவி அதிர்ஷ்ட லட்சுமி வேறு போன் பேசாமல் இருக்கிறாள், எப்படி அவளை சமாளிப்பது எனத்தெரியாமல் குழம்பிய மனநிலையில் இழந்தைச்செடியின் அருகில் அமர்ந்திருந்தான் கேசவன்.

கம்பெனிக்கமாண்டர் ஹரிஹிசன் மிகவும் கண்டிப்பான ஹரியானாவைச்சார்ந்த ஜாட், ஆறடி உயரமும் , ஆஜானுபாகுவானத் தோற்றமும் கொண்டவர். அவர் விசில் அடித்த ஐந்து நிமிடத்திற்குள் இராணுவ முகாமில் இருக்கும் அனைத்து வீரர்களும் அவர் முன்  வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்களை 100 தண்டால்களுக்கு  மேல் எடுக்கச்சொல்வார். வெக்கையும், குளிரும் நிரம்பியிருக்கும் பாலை மணலில் கை வைத்து தண்டால் எடுப்பது எளிதான விசயமில்லை. எப்பேற்பட்ட பலசாலியும் அசந்துதான் போவான்.

பலமுறை வெங்கட் தாமதமாக வந்து ஹரிஹிசனிடம் சிக்கியுள்ளான். .

“இந்த காட்டுப்பய இப்படி செய்யுறானே,  என மனதுக்குள்ளேயே நொந்து கொள்வான் வெங்கட். இன்று கேசவனின் மனம் நிலைகொள்ளாமல் இருந்ததால் அவனுக்கு ஹரிஹிசனின்  விசில் சப்தம் கேட்கவில்லை.

கம்பெனியில் இருக்கும் இராணுவ வீரர்கள் அனைவரும் தமது துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நின்றுவிட்டனர். சூரியப்பாண்டியும், வெங்கியும் வேகமாக ஓடிவந்தனர். எப்போதும் சரியான நேரத்தில் வரும் கேசவன் இன்று வரவில்லை.

இரவில் அனைவரும் கண்டிப்பாய் இந்த கணத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். அப்படி வராதவர்கள் மீது டிசிப்பிளின் ஆக்சன் எடுப்பார்கள். கேசவனின் ஆப்சண்ட்டை உறுதிசெய்த ஹரிஹிசன் , வெங்கியை அழைத்து தேடிப்பார்க்கச் சொன்னார். வெங்கி தேடியபோது தூரத்து மணல்மேட்டில் கேசவன் அமர்ந்திருப்பதை  பார்த்துவிட்டான்.

வெங்கி அருகில்வந்து தொட்டவுடன்தான் கேசவன் இருட்டிவிட்டிருந்ததை உணர்ந்தான்.

” ஐயோ ஹரிஹிசன் விசில் அடிச்சிருப்பாறே”

எனப்புலம்பியவாறே விரைந்தான் கேசவன்.

” எல்லாம் முடிஞ்சு போச்சு தண்டால் எடுக்க வாடா மச்சான்  எனக் கேலி செய்தவாறேக் கூறினான்.

இருவரும் மணல்மேட்டிலிருந்து ஓடிவருவதைப்பார்த்த ஹரிஹிசன் தன் கரகரத்த குரலில்

” வாங்க வாங்க கேசவ் தம்பி” (ஆஜாவ், ஆஜாவ் கேசவ் பாய்)  எனச் சப்தமாகக் கூறினார் ஹரிஹிசன்.

இராணுவ வீரர்கள் எவரையாவது பனிஸ்மெண்ட் செய்யும்போது ஹரிஹிசனின் குரல் மிகவும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

கேசவனும் குளிர்நிரம்பிய மென்மனலில் கைவத்து நூறு தண்டால் எடுத்தான். இவ்வளவு கண்டிப்பான ஹரிஹிசனிடம் ஒரு நல்லப்பழக்கம் இருந்தது. தான் தண்டனை குடுத்த இராணுவவீரனை அழைத்து பாசத்தோடு பேசுவார். என்னப்பிரச்சனை என விசாரிப்பார்.

“அருகில்வா” (இதராஜாவ்) என கேசவனை அழைத்தார்  ஹரிஹிசன்.

”இருக்குற வேலையிலேயே ரொம்ப சிரமமான வேலையின்னா அது பட்டாளக்காரனா இருக்குறதுதான், பட்டாளத்துல எல்லோராலையும் வேலை செய்ய முடியாது. அதுக்கு ஒரு பெரிய மனசு வேணும்”

இங்க எதையும் எதுக்க முடியாது , ஒரு வீரன் எல்லாத்தையும் ஏத்துக்கொண்டுத்துதான் வாழ வேண்டும். “நீ ஒரு நல்லப் பட்டாளக்காரன் என்றார். உனக்கு என்னப் பிரச்சனை” எனக் கேசவனைத் தோழமை அன்போடு தழுவியவாறேக்  கேட்டார். 

”கேசவன் “சார் பர்ஸனல் பிராப்ளம்” என்றான்.

”பட்டாளத்துக்காரங்க பர்ஸனல் பிராப்ளத்தையும் சேர் செய்யனுமுன்னு ஆர்டரே இருக்குத் தெரியுமில்ல”

என்ன உன்னோடப்  பிரதரா நினைச்சுக்க என்றார்.

பின் கேசவனின் மனைவியின் ஆசையைத் தெரிந்துகொண்ட ஹரிஹிசன்

“அப்படியா,  அப்படியா”  (அச்சா, அச்சா) எனத் தலையை அசைத்தவாறு சொல்லிக்கொண்டார்.

சரி நான் அதிகாரி கர்னல் விமல்பண்டிட்கிட்டப் பேசி உனக்கு விரைவா குவாட்டர்ஸ்” கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கேசவனும் மகிழ்ச்சியோடுப் புன்னகைத்தான். மனைவி அதிர்ஷ்ட லட்சுமிக்கு இந்த விசயத்தை வாட்சப் செய்ய வேகமாய் கைப்பேசியைத் தேடினான். தான் அமர்ந்திருந்த மணல் மேட்டின் மீது கைப்பேசியை விட்டுவிட்டு வந்ததை உணர்ந்து விரைந்து மணல்மேட்டை நோக்கி ஓடினான் கேசவன் . 

அன்பு மனைவிக்கு…

விரைவில் வருகிறேன் என் அதிர்ஷ்டத்தை என்னிடமே அழைத்துவர எனத்  தட்டச்சு செய்து, ஹார்ட்டின் படம் போட்டு அனுப்பினான். ஹரிஹிசன் ஒருமுறை சொல்லிவிட்டாலே கண்டிப்பாய் செய்துவிடுவார் என கேம்பில் உள்ள சக இராணுவ வீரர்கள் பேசிக்கொண்டார்கள். விரைவில் குவாட்டர்ஸ் கிடைக்கவும் மனைவியை உடனே அழைத்துவந்து உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டான். வானில் பௌர்ணமி நிலவு ஒளிர்ந்துகொண்டு கேசவனின் மனதில் நம்பிக்கை ஒளியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

*******

“என்னாடீ இன்னைக்கு ஒரே குஷியா இருக்குறவ” எனத் தனக்கொடிப் பாட்டி அதிர்ஷ்ட லட்சுமியைப் பார்த்துக் கேட்டபொழுது அவள் பலகாரம் சுட அரிசி மாவைப் பிசைந்துகொண்டிருந்தாள்.

“ஓம் பேரன் வர்ரன்னு சொல்லியிருக்குள்ள அதான்” சந்தோசமாயிருக்கேன். நீயும் அந்தக் காலத்துல தாத்தா வீட்டுக்கு வர்ரப்ப எப்படி இருந்தையாக்கும்? எனத் தனக்கொடி பாட்டியிடம் பதில் கேள்வி  கேட்டாள் அதிர்ஷ்ட லட்சுமி.

அந்தக் கிழவன் எங்க வெளியப் போனாரு, சாகுற வரைக்கும் என் முந்தானையப் பிடிச்சுக்கிட்டுதானே இருந்தாரு”   ”என் பேத்தி பெரிய வாயாடி” எனக் கூறிக்கொண்டே  முகக்கவசத்தை கழட்டிவிட்டு தன் பொக்கைவாயைத் திறந்து  ஹா ஹா எனச் சிரித்தாள் பாட்டி.

*******

”டேய் மாப்ள உனக்கு விசயம் தெரியுமா லடாக் பார்டர்ல சீனா ஆர்மிக்கும் நமக்கும் சண்டை ஆரம்பிச்சுருச்சாம். அதனால எல்லோரும் மூவ்மெண்ட் ஆகி உடனே பார்டர் ஏரியாவுக்கு வரச்சொல்லி ஆர்மி ஹெட்குவாட்டர்ஸ்ல இருந்து ஆர்டர் வந்திருக்காம்.எட்டுமணிக்கு எல்லோரையும் கர்னல்  மைதானத்துக்கு வரச்சொல்லி உத்தரவு போட்டிருக்காராம்” என்றான் வெங்கட்.

அக்கணத்தில் கேசவனின் முகம் மலர்ந்தது, ஒவ்வொரு இந்திய இராணுவ வீரனும் போர்க்களம் சென்று சண்டையிடவே விரும்புவான், அதுபோலவே கேசவனும் எதிரியை குளிர்மிகுந்த மலைப்பகுதியில் நேருக்கு நேராய் சந்தித்துச்  சண்டை போட வந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தான். அவனது சொந்தப்பிரச்சனை எல்லாம் கேசவனிடமிருந்து பனித்துளியைப் போல் மறைந்துபோயிருந்தன. கேசவனின் மனதில் அத்துமீறி நாட்டிற்குள் நுழையும் சீன இராணுவத்தினரை எப்படி சுட்டு வீழ்த்தலாம் என்ற எண்ணங்களே மிகுந்திருந்த அதேவேளையில் ஊரில்  தன் கனவு வாழ்க்கை நிஜமாகப்போகிறது என்ற சந்தோசத்தோடும் , உற்சாகத்தோடும் பம்பரம்போல் சுழன்று சுழன்று பணிசெய்துகொண்டிருந்தாள் அதிர்ஷ்ட லட்சுமி.  அவள் வீட்டிற்குப் பின் உள்ள முருங்கையில் வெள்ளைப்பூக்கள் அழகாய் பூத்திருந்தன.

-முற்றும்-

நன்றி : பேசும் புதிய சக்தி நவம்பர் 2021


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube