
ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாக கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்.
இராஜஸ்தான் என்றால் அனைவருக்கும் உடனே நினைவு வருவது பாலைவனமும், ஒட்டகங்களும், வெக்கையும்தான் ஆனால் மணல் நிறைந்த பாலை நிலத்தில் குளிரும் மிகுதியாகவே இருக்கும் என்பதை வெகுசிலரே அறிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட குளிர்மிகுந்த, பனிபடர்ந்த ஜனவரி மாதத்தில்தான் மண்டியிடுங்கள் தந்தையே புத்தகத்தை படிக்கத்துவங்கினேன். எஸ். ரா அவர்களின் புத்தகங்கள் எனக்கு எப்பொழுதுமே மனதிற்கு நெருக்கத்தை கொடுக்க கூடிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. இராணுவத்தில் சேர்ந்த காலகட்டத்தில் அவர் விகடனில் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம் தொடர்கள் வரும் விகடன் புத்தகத்தை வாங்குவதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அலைந்து திரிந்த நினைவுகள் மனதில் இன்னும் பசுமையாக பதிந்துள்ளது.
இராணுவ வீரர், எழுத்தாளர், சமுதாய சிந்தனையாளென பன்முக ஆளுமைமிக்க மனிதரின் வாழ்க்கையை புனைவாக்குவது எளிதான விசயமில்லை. ரஷ்ய பனியின் குளிரை எஸ்.ராவின் ஒவ்வொரு வரியை படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
டால்ஸ்டாயின் வாழ்க்கையில் அவருக்கு மனதிற்கு நெருக்கமான அக்ஸின்யாவின் வாழ்க்கையை ஒட்டியே நாவலில் அதிகம் விவரிக்கப்பட்டுள்ளது. நாவலைப் படித்து முடிக்கும்போது “சிவப்பு அங்கி அக்ஸின்யா” கதாபாத்திரம் நம் மனதில் ஒரு மகத்தான ஆளுமையாக நின்றுவிடுகிறாள்.
தந்தை கண் முன்னே இருந்தும் அவரின் அன்பிற்காகவும், அவரின் பார்வைக்காகவும் ஏங்கும் மகனாக இருக்கும் திமோஃபியின் ஏக்கம் ஞாயமான ஒன்றாகவே வாசகனுக்குப் படுகிறது. ஆனால் சமுதாயத்தில் அங்கீகாரம் அளிக்க முடியாத சூழலில் டால்ஸ்டாய் உள்ளார். நாவலின் இறுதியில் அக்ஸியாவின் புதைமேட்டில் மலர்களை வைத்துவிட்டு மண்ணை வருடும் டால்ஸ்டாய் மனதில் அக்ஸின்யாவின் மேல் வைத்திருக்கும் காதலை அறிந்துகொள்ள முடிகிறது.
தன் கணவரின் கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தாலும் சோபியா , டால்ஸ்டாயின் மீது அதீதமான அன்பை கொண்டவராக உள்ளார் என்பதை நாவலைப் படிக்கும்பொழுது பல தருணங்களில் அறிந்துகொள்ள இயலுகிறது.
நாவலில் வரும் முட்டாள் டிமிட்ரியின் காதாபாத்திரத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது, முட்டாள் டிமிட்ரியின் ஒவ்வொரு வாசகமும் ஞானியைப் போலவே சொல்லப்பட்டிருக்கிறது.
டால்ஸ்டாயின் வாழ்க்கையை அறிந்துகொள்ளவும், ரஷ்ய நிலவியலை எழுத்தில் கொண்டுவரவும் எஸ்.ரா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை நாவலைப் படித்து முடிக்கும்போது வாசகர்கள் உணர்வதுதான் நாவலின் வெற்றியாக நினைக்கிறேன்.