.
தொலைதூரத்தில் பாலை மணல்வெளியில் ”ஆர்மட் ரெஜிமெண்டினர் செய்துவரும் போர் பயிற்சியினால் எங்கள் கம்யூனிகேசன் இராணுவ முகாம் வரை இடைவிடாத ”டம் டம்மென” குண்டு சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இராணுவ பேரக்கின் முன்பு இருக்கும் அரசமரமும், வேப்பமரமும் மழைவேண்டி தியானித்திருப்பது போல் சலனமற்று நின்றிருந்தது. வெண்மையான துகள் துகளான மணலின் ,மேல் கட்டெறும்புகள் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. கருமேகங்கள் வானில் வேகமாக நகர்ந்து வந்தது. குளிர்காற்று வீசத்துவங்கியது மழையோடு சம்பாசனை செய்வதுபோல் மரங்கள் தன் கிளைகளை அசைத்தது, மரங்கள் சந்தோசமாக மழை பார்த்து புன்னகைப்பது போல் இருந்தது. பாலை நிலத்தில் மழைப்பொழிவதென்பது பெரும் நிகழ்வுதானே. வெக்கை ஏறிய மணலில் மழைத்துளிப்பட்டவுடன் மண்வாசனை மலர்ந்து மனதை நிரப்பியது. அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் இடையே “ஜித்தேந்தர்” அமைத்துவிட்டுச் சென்ற சிறிய ஊஞ்சல் காற்றில் ஆடிக்கொண்டு மனதில் ஜித்தேந்தர் பற்றிய நினைவுகளை கிளரி விட்டுக்கொண்டிருந்தது.
பழமையான இந்த இருமரங்களின் இடையே ஜித்தேந்தர் உருவாக்கி விட்டுச் சென்ற பறவைகளுக்கான சிறிய ஊஞ்சலில் கிளிகளும், புறாக்களும் வந்து அங்கு சிறு குடுவைகளில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை கொத்திக்கொண்டும், கீச் கீச் சப்தத்தை உண்டாக்கி கொண்டிருந்தது. அந்த அழகிய ஊஞ்சலுக்கும் குடுவைக்கும், பச்சை வண்ண நிறத்தைப் பூசியிருந்தான் ஜித்து. சில தினங்களுக்கு முன்புதான் ஜித்தேந்தர் ராஜஸ்தானிலிருக்கும் இந்த இராணுவமுகாமை விட்டு ”ஜெட்கல்லி” என்ற காஷ்மீரில் இருக்கும் இடத்திற்கு பணி மாற்றலாகிச் சென்றிருந்தான்.
”ஜெட்கல்லி” பாகிஸ்தான் அருகில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஓர் இடம். நான் ஏற்கனவே அந்தப் பகுதியில் பணியாற்றியிருந்தேன். ஒரு நாள் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்த பகல் பொழுதில் தேசி கீகட் ( கருவேல மரம்) மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த பொழுது ” ஏய் ”காந்தி” எனக்கு ஜெட்கல்லிக்கு வாரேமே தோடா பத்தாவ்யா? என ஜெட்கல்லி ஊரைப்பற்றிக்கேட்டான். காட்டிற்குள் இருக்கும் அடர்ந்த பெரு இழந்தை மரங்களுக்குள் நீல்காய் கூட்டம் கூட்டமாக ஓடிக்கொண்டிருந்தது. நீல்காய் மானைப்போன்ற உடலையும் மாட்டினைப் போன்ற முக அமைப்பையும் கொண்டது. தாவி ஓடுவதில் பெரும் திறமை பெற்ற இவ்விலங்கு, பயந்த சுபாவம் கொண்டது. இராஜஸ்தானில் வெய்யிலின் தாக்கம் அதிகமாகயிருக்கும் காலங்களில் நீரைத்தேடி இராணுவக் குடியிருப்புகளுக்கு அருகில் அலைந்து கொண்டிருக்கும். கூட்டம் கூட்டமாக இவை ஓடிச்செல்லும் வேகத்தை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.
நாமும் இந்த நீல்காய் போன்றுதானே ”ஜித்து” என ஜித்தேந்தரைப் பார்த்துக்கேட்டேன்.
ஒரு இடத்தை விட்டு ஒரு இடம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
”நீயும் இன்னும் சில வாரங்களில் எங்களை விட்டு பிரிந்து ஓடிச்சென்றுவிடுவாய்” என சொன்னதற்கு ஜித்து என் கைகளைப் இருகப்பற்றிக்கொண்டான். அந்த வெக்கை மிகுந்த மதிய நேரத்தில் தூரத்தில் தேசி ஹீகட் மரங்களும், இழந்தை மரங்களும் நிறைந்த கானகத்தினுள் நின்றுகொண்டிருந்த நீல்காய் ஒன்று எங்கள் இருவரையும் கண்கொட்டாமல் தன் அகன்ற விழிகளைக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தது.
அதிகாலையிலேயே காற்று சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. கருஞ்சாலையில் மெல்லிய மணல் நடனமாடுவதுபோல் சென்றுகொண்டிருந்தது. வெக்கை மிகுந்திருந்தது. பேரக்கின் பெரிய வராண்டாவில் அமர்ந்திருந்தேன். கங்காதர் அப்போதுதான் சாய் சாய் என சப்தம்போட்டபடி வந்துகொண்டிருந்தான். அவனது ஏற்ற இறக்கமான இனிமையான சப்தத்திற்காகவே ”சாயை” இராணுவ வீரர்கள் விரும்பிக்குடித்தனர். கங்காதர் பதின்வயதில் இருக்கும் இளைஞன். நான் இராஜஸ்தானுக்கு வந்த இருவருடங்களாகவே அவன் இங்குதான் உள்ளான். கங்காதரின் அப்பா சூரத்கட் இரயில்வேஸ்டேசன் முன்பில் இருக்கும் ஒரு சிறிய உணவுக்கடையில் மாஸ்ட்டராகப் பணிபுரிகிறார். அந்த உணவுக்கடையில் கிடைக்கும் கச்சோடியும், சமோசாவும் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிறிது காரத்தோடு தயாரிக்கும் மிளகாய்ச்சட்டினியோடு கச்சோடியை சேர்த்து சாப்பிடும்போது சுவையே அலாதிதான்.
கங்காதருக்கும் எனக்கும் உள்ள சிநேகிதத்தை விட, ஜித்துவிற்கும் , கங்காதருக்கும்தான் நட்பு அதிகம். ஜித்து சென்ற சில தினங்கள் கங்காதர் மௌனித்திருந்தான். அவனது அந்த இனிமையான குரல் காணாமல் போயிருந்தது. கங்காதர் என்னிடம் வந்து “ ஜித்துபாய் செல்லாகையா படியா ஆத்மிகே” என்றான், சாயா குடிக்கிறீர்களா? எனக்கேட்டுவிட்டு அவனாகவே லாக்கரின் மேல் இருந்த கோப்பையை எடுத்து தேநீர் ஊற்றிக்கொடுத்தான்.
”ஜித்து” எனக்கு போன் செய்தார். உங்களுக்கு போன் செய்தாரா ? எனக்கேட்டான்.
நான் இல்லை எனத் தலையசைத்தவாறு, ஜித்துவைப் பற்றிய நினைவுகளை எண்ணியவாறு தேநீரைப் பருகத் துவங்கினேன்.
ஜித்து அமைத்த அந்த பறவைக்கான ஊஞ்சலில் அழகிய புதிய பறவையொன்று தன் சிறகை சிலுப்பியவாறு நின்றுகொண்டிருந்தது. ஜித்து ஆறடி உயரமும், திடகாத்திரமான தேகமும் கொண்ட இளைஞன். அவனது முகத்தில் இருக்கும் மெல்லிய மீசையை முறுக்கிவிட்டிருப்பான். கண்கள் சிறியதாக இருந்தாலும் பிரகாசமாய் இருக்கும்.
ஒரு வெக்கைமிகுந்த ஞாயிறன்று மூவரும் “சூரத்கட்” நகரத்திற்கு சென்றோம். பல நூற்றாண்டுகளுக்கு மகாராஜா சூரத்தினால் உருவாக்கப்பட்ட சிறுநகரம்தான் சூரத்கட். வழியெங்கும் ஒட்டகங்களால் இழுக்கப்பட்டு செல்லும் டயர் பொறுந்திய மர வண்டிகள் சாலையில் சென்றுகொண்டிருந்தது. ஒட்டகங்கள் தன் முதுகை தூக்கிக் கொண்டு செங்கல் நிறைந்த வண்டிகளை இழுத்துச்சென்றுகொண்டிருந்தது. வயல்வெளிகளில் சீரகப்பயிரின் வெள்ளைப் பூக்கள் பரந்து விரிந்திருந்தது. சாலையில் கைகளில் முட்டிவரை வண்ண வண்ண வளையல்களை அணிந்துகொண்டும், முகத்தை சேலையால் மறைத்துக்கொண்டும் பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். சூரத்கட் இரயில்நிலையத்துக்கு முன்பிருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான் கங்காதர். ஹோட்டலில் வெள்ளை உடை உடுத்தியிருந்த ஒல்லியான மனிதரைக்காட்டி இவர்தான் என் அப்பா பப்ளு சிங் என்றான். பப்ளு சிங் எங்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, உள்ளே போய் அமரச்சொன்னார். பின் தன் சட்டைப்பையிலிருந்து 502 பீடிக்கட்டினை எடுத்து புகைக்கத்துவங்கினார். பின் சப்ளையரைப் பார்த்து மூவருக்கும் சுடசுட இருந்த கச்சோடியை கொடுக்கச்சொன்னார். ஆவிபறந்துகொண்டிருக்கும் கச்சோடியை மூவரும் ருசித்து சாப்பிட்டோம். சூரத்கர் என்றால் அழகான வீடு என்று அர்த்தம். வடக்கு நோக்கிய கங்காநகர் வரைச் செல்லும் இரயிலின் குளிர் நிரம்பிய காலைப்பொழுதில் சூரத்கட்டில் இறங்கி முதன் முதலில் சாப்பிட்டது இந்த கச்சோடிதான். பொன்னிறமாக இருக்கும் கச்சோடிக்குள் வைத்திருக்கும் மாசலா கலந்த பருப்பின் சுவையோடு கச்சோடியை சாப்பிட்டால் நாவில் இருக்கும் சுவை மனதை நிறைத்துவிடும்.
ஜித்துவும், கங்காதரும் பக்கத்திலிருக்கும் துணிக்கடை பஜாருக்கு செல்ல வேண்டும் என்றனர். இரண்டு நாள் முன்பு நடந்து முடிந்த துப்பாக்கிப் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயத்தின் வலியால் என்னால் அவர்களோடு செல்ல இயலவில்லை.
ஜித்து நீ போயிட்டு வா..
என்ன மதராஸி அவ்வளவுதானா.. எனக்கு துணி எடுத்துத்தர உதவி செய்யலையா என்றான் ஜித்து.
இல்ல ஜித்து நீ போயிட்டு வா என்றேன்.
பின் ஜித்துவும், கங்காதரும் இரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையைக் கடந்து துணிக்கடைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
கடையில் வயதான சாமியார் ஒருவர் மட்டும் சமோசாவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வெக்கை மிகுந்திருந்தது. பப்ளுசிங் பீடியை புகைத்துக்கொண்டே என் அருகில் அமர்ந்தார். அவர் கண்ணில் ஏக்கம் மிகுந்திருந்தது. பாக்கெட்டிலிருந்து 502 பீடிக்கட்டினை எடுத்து ஒரு பீடி எடுத்து வாய் நிறைய புகை விட்டார். பின் சாமியாரிடம் பேசத்துவங்கினார்.
தன் அப்பா பப்ளுசிங் ஒரு நாடோடி எனவும் ஒரு இடத்தில் தங்கி வேலை செய்ய மாட்டார். எப்போதும் எங்காவது பயணப்பட்டுக்கொண்டேதானிருப்பார். இரண்டு வருடங்களாகத்தான் இந்தக் கடையில் வேலை செய்கிறார், அவர் வீட்டில் இருக்கும் போது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறிய மணல் மேட்டில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கும்போது தான் சுற்றித்திரிந்த விசயங்களைக் கதைகளாக கூறுவார் என கங்காதர் கூறியது என் மனதிற்குள் வந்து சென்றது.
சாமியார் தன் கழுத்திலிருந்த ருத்ராட்சையை தடவிக்கொண்டே பப்ளுசிங்கைப் பார்த்து மெல்லிய புன்னகை செய்தார். பின் தான் காசி தரிசனத்திற்குப்பின் டெல்லி வந்து பிக்கானியரில் இருக்கும் கர்னிமாதா கோயிலுக்கு போயிட்டு வந்ததாக பப்ளுசிங்கைப்பார்த்து கூறினார்.
ஓ அப்ப எலிக்கோயிலுக்கு போயிட்டு வந்தீங்களா எனக்கூறிவிட்டு பீடியின் புகையை உள் இழுத்து நாசியில் விட்டார்.
பிக்கானியரிலிருந்து சூரத்கட்டுக்கு எதுக்கு வந்தீங்க?
வெக்கையும் மண்ணையும் தவிற இங்க அப்படி என்ன இருக்கு?
உங்களப் பாக்கனுமுன்னு இருந்திருக்கு அதுதான் வந்தேன்
ராம்.. ராம்…
”எல்லாரையும் பார்த்துக்கிட்டு , கஷ்ட்டத்தையும், சுகத்தையும் ஏத்துக்கிட்டு தாவி ஓடிக்கொண்டேயிருப்பதுதானே வாழ்க்கை என்றார் சாமியார்.
பப்ளுசிங் சிரித்துக்கொண்டே பீடியை இழுத்தார்.
சாமியார் கடையிலிருந்து இரயில்நிலையம் நோக்கி நடந்து சென்றார்.
கம்பெனி கவில்தாரின் விசில் சப்தம் கேட்டது.
கங்காதர் கொடுத்த தேநீரில் கட்டெறும்பொன்று விழுந்திருந்தது.
பேரக்கிலிருந்த சக இராணுவ வீரர்கள் மைதானத்திற்கு விரைந்துகொண்டிருந்தனர். உற்சாகமாக வெய்யிலோடு விளையாட ஓடும் சிறார்போல் அனைத்து இராணுவ வீரர்களும் ஓடத்துவங்கினோம்.
சாலையில் மெல்லிய மணல் வான் நோக்கி எழும்பி காற்றோடு சேர்ந்து சுழன்று சுழன்று நடனமாடிக் கொண்டிருந்தது. நீண்டிருந்த கருஞ்சாலையில் கானல் நீர் காட்சிகள் பொய்பிம்பமாய் தோன்றி மறைந்து கொண்டிருப்பதை போலே மனதில் ஜித்துவின் நினைவுகளும் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது. பதின் பருவத்திலேயே இராணுவ வாழ்க்கை கிடைக்கப்பெற்றதால் அன்பின் தேவையை நட்புகள்தான் பூர்த்திசெய்கின்றனர். அந்த நட்பினால் கிடைக்கப்பெற்ற அன்பின் ஸ்பரிசம் பிரிந்து செல்லும்போது, எவ்வளவு பெரிய வீரனாகயிருந்தாலும் கண்கலங்குவதை யாரும் தவிர்த்துவிட இயலுவதில்லை.
ஜித்துவும் பிரிந்து செல்லும்போது கண்கலங்கித்தான் போனான். ஜித்து எங்களை விட்டு பிரிந்து செல்லும்போது இறுதியாக அவன் கண்கள் கண்ட காட்சி அவன் அமைத்த இந்தக் கூண்டில் தங்கியிருக்கும் பறவைகளைத்தான். ஜித்து பல சாலியாகவும் முன்கோபியாகவும் இருந்தாலும் பறவைகளிடத்திலும் , விலங்குகளிடத்திலும் அன்பு செய்பவனாகவே இருந்தான். அதிகாலை எழுந்ததும் பறவைகளுக்காக அவன் வாங்கி வைத்திருக்கும் பாஜரியை (கம்புப் பயிர்) எடுத்து பறவைகளுக்குப் போடுவான். நீர் வேண்டி கானகத்தினுள் அலைந்து திரியும் நீல்காய்களுக்கு பெரிய பீப்பாயில் நீர்பிடித்து இழந்தை மரங்களும், கருவேல மரங்களும் நிறைந்த கானகத்தினுள் சென்று வைப்பான். மனதில் அவனுக்கான கொள்கையை சித்திரம்போல் வரைந்து வைத்திருந்தான், அந்தக் கொள்கஒயிலிருந்து பிழறாமல் வழிமுறைப்படித்தியும் வந்தான். அதிகாலை எழுவது, புகை, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகமல் இருப்பது, சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, புத்தகங்கள் படிப்பது என அவனிடமிருந்த பல நல்ல பழக்கங்களில் இவைகளும் இருந்தன. ஒரு முறை கங்காதரை கேலி செய்த சில இராணுவ வீரர்களை புரட்டி எடுத்துவிட்டான். அவர்கள் வாயிலும் , கையிலும் இரத்தக்கசிவோடு ஜித்துவைப்பார்த்து ” மனுசனா இவன் இந்த அடி அடிக்கிறான்” காட்டுப்பயல் என திட்டிக்கொண்டே சென்றனர்.
“காட்டுப்பயல்” ஆம் ஜித்து ஒரு காட்டுப்பயல்தான் சுதந்திர போராட்ட வீரரான “சந்திரசேகர ஆசாத்” போராட்ட காலத்தில் ஜான்ஸிக்கு அருகில் உள்ள காடுகளில் மறைந்து வாழும்போது அருகில் உள்ள கிராமத்தில் அங்குள்ள குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளித்துவந்தார். ஆசாத்திடம் போர் பயிற்சி பெற்றவர்தான் ஜித்துவின் தாத்தா ஹரிஹர திவாரி. ஆசாத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் தன் மகள் வழி பேரனான ஜித்துவிற்கு ஆசாத் பற்றிய வீரதீரக் கதைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். ஜித்துவும் ஆசாத்தைப் போன்றே முருக்கிய மீசையுடனும் திடகாத்திரமான உடல் அமைப்புடனும் இருந்தான். அவன் கிராமம் பெருங்காட்டின் அருகிலேயே இருந்ததால் ஜித்துவின் பால்யம் காடுகளிலேயே கழிந்தது. காடுகளில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்றெ சப்தமெலுப்புவான். எந்த ஒரு பறவையையும் சப்தம்போட்டு அழைக்கும் திறமையை கற்றுவைத்திருந்தான்.
தாத்தா சொல்லி வளர்த்த ”ஆசாத்” பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்டு ஆசாத்தைப் போன்றே உடல் வலிமை பெற்று வீரமானவனாக வளர்ந்துவிட்டிருந்தான். பால்யத்தில் காட்டில் உள்ள ஆஞ்சிநேயர் கோயிலை ஒட்டி ஓடும் நதியில் நீந்தி பழகியதால் ஜித்துவால் நீண்ட நேரம் நதியில் நீந்திக் கடக்க முடியும். ஒரு முறை ஜித்து கலந்து கொண்ட நீச்சல் போட்டியைக்காண நானும் சென்றிருந்தேன், அவன் தண்ணீரில் இறங்கியதும் மீனைப்போன்று மாறி நீந்தி மகிழ்வதைப் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஜித்து இராணுவத்தில் நடக்கும் நீச்சல்போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வாங்கியிருந்தான். உன் முரட்டுத்தனத்துக்கு இராணுவம்தான் லாயக்கு என தாத்தா ஹரிஹர திவாரி தன் பள்ளி வயதில் கூறியதாக பல முறை என்னிடமும், கங்காதரிடமும் பகிர்ந்துள்ளான் ஜித்து.
ஜித்துவிற்கு ஒரு அண்ணன் இருந்தான் அவன் பால்யத்திலேயே இறந்துவிட்டதால், சகோதர பாசம் வேண்டி ஏங்கி இருக்கிறான் ஜித்து. எங்கள் முகாமிற்கு ஜித்து போஸ்ட்டிங் வரும்பொழுது முதன் முதலில் முகாம் நுழைவாயிலில் “ஆஜாவ் பையா” (வாருங்கள் சகோதரரே) என அழைத்தவன் கங்காதர்தான். கங்காதர் நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் கடையின் வெளியில்தான் அதிக நேரம் அமர்ந்து பொழுதைக் கழிப்பான். அன்று பின்மதிய வேளையில் ஜித்து முகாமிற்குள் வரும்பொழுது கங்காதர்தான் பார்த்து பேசியுள்ளான்.
காந்தி, “கங்காதரை பார்க்கும்பொழுது தன் இறந்துபோன சகோதரனைப் பாக்குறது மாதிரி இருக்கு” என என்னிடம் அடிக்கடி கூறியுள்ளான் ஜித்து. கங்காதரின் மேல் அதீத பாசம் இருந்தது ஜித்துவிற்கு.
கங்காதர் பணிக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. தொலைபேசியில் அலைத்துப்பார்த்தேன். நம்பர் செயலில் இல்லை என வந்தது.
கங்காதரின் அண்ணன் ஜெய்பூரில் உள்ள ஒட்டகப் பண்ணையில் பணிபுரிவதாகவும், ”தன்னையும் பணிக்கு அங்கு அழைப்பதாகவும்” என கங்காதர் சொன்னது நினைவில் வந்து சென்றது.
சில மாதங்களுக்குப் பின் பப்ளுசிங்கை கெண்டோன்மெண்ட்டின் வெளியில் பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன். அவரே தொடர்ந்தார், கங்காதர் அவன் அண்ணனிடம் சென்றுவிட்டதாகவும். கொரானாவினால் எனக்கும் கடையில் வேலை இல்லை. முதலாளியிடம் முன் பணம் கேட்டேன். வேலை செய்யும்போது சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினேன்.
“சாலா… கேக்கவேயில்லை , இத்தனை நாள் அவனுக்காக வெக்கையில நின்னு எத்தன ஆயிரம் சமோசாவும்,
கச்சோடியும் போட்டுக்கொடுத்தேன். எவ்வளவு லாபம் பார்த்தான். தொழிலாளிக்கு தேவைப்படுறப்ப உதவாத முதலாளி என்ன மனுசன். அவனிடம் வேலை செய்யுறதுக்கு பதிலா , இந்த ரோட்டோரமாக படுத்திருக்கும் தெருநாயைப் போல நிம்மதியா படுத்து தூங்கிட்டுப்போகலாம்”
சாலையோரத்தில் சிவப்பு நிறத் தெருநாயொன்று அத்தனை பரபரப்பான சாலைக்கு அருகிலேயே நிம்மதியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தது.
பப்ளுசிங் “கங்காதர் தீபாவளிக்கு வீட்டுக்கு வருவான் அப்ப வீட்டுக்கு வா. வீடு எங்கருக்குன்னு தெரியுமில்ல”
“ம்ம் கங்காதர் சொன்னான்” என்றேன்
என்னிடமிருந்து விடைபெற்ற கங்காதரின் அப்பா தன் வெள்ளை குர்த்தாவிலிருந்து 502 பீடிக்கட்டினை எடுத்து புகைத்துக்கொண்டே சூரத்கட் செல்லும் சாலையை நோக்கி நடந்து சென்றார்.
செப்டம்பர் மாதமாக இருந்ததால் மழைக்காலம் ஆரம்பித்திருந்தது. வானில் கருமேகங்கள் நிறைந்திருந்தன. சிறிது நேரத்தில் மழைத்தூர ஆரம்பித்தது. இப்போது கங்காதர் பெரிய ஒட்டகத்தினைக் கயிற்றால் பிடித்துக்கொண்டு ஜெய்பூரின் காடுகளில் அலைந்து கொண்டிருப்பான்: “ஜித்து”க் காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பணிபுரிந்துகொண்டு பறவைகளோடோ, விலங்குகளோடோ பேசிக்கொண்டிருப்பான். கங்காதரின் அப்பா பப்ளுவும் எங்காவது நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டிருப்பார். நானும் இந்தப் பாலையில் சுறுசுறுப்புடன் ஏதோ ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு ஊர்ந்து செல்லும் கட்டெறும்புபோல் நட்பின் நறுமணத்தை நினைத்து நுகர்ந்துகொண்டு பயணிக்கிறேன். எல்லோரும் நாளைய கனவுகளை சுமந்து கொண்டும் , நம்பிக்கையை பற்றிக்கொண்டுதானே வாழ்ந்து வருகிறோம். கானகத்தில் சாம்பல் நிற மேனியோடு நீல்காய்கள் தண்ணீரைத் தேடிக்கொண்டு தாவித்தாவிக் கூட்டம் கூட்டமாக ஓடிக்கொண்டிருந்தன.